பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, தலித் சிறுவர்களை மலம் அள்ள வைத்த நபர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பெரம்பலுார் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த, 10 - 15 வயதுடைய ஐந்து சிறுவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான பொது இடத்தில், நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்றனர்.அப்போது, வேறு சமுதாயத்தைச் சேர்ந்த, 18 - 20 வயதுடைய மூவர், தலித் சிறுவர்களை சுற்றிவளைத்து, பொது இடத்தில் அவர்கள் கழித்த மலத்தை, கையால் அள்ளி அப்புறப்படுத்த வைத்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கூறியுள்ளனர். இத்தகவல், அப்பகுதி தலித் சமூகத்தினரிடையே பரவி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வி.சி., கட்சியின் மாநில செயலர் வீரசெங்கோலன் தலைமையில், அப்பகுதி மக்கள், சிறுகுடல் - -பெரம்பலுார் சாலையில், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களை மலம் அள்ள வைத்த நபர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏ.டி.எஸ்.பி., நீதிராஜ் மற்றும் மருவத்துார் போலீசார், 'விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE