ராமநாதபுரம்:இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கடல் வழியாக தமிழகத்திற்கு நாட்டுப்படகில் கடத்திய ரூ.5 கோடி மதிப்புள்ள9.7 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேரை கைது செய்தனர்.
நேற்று அதிகாலை மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை கப்பல் உதவியுடன் துாத்துக்குடி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மண்டபம் அருகே மனாளி தீவு பகுதியில் நின்ற நாட்டு படகை அதிகாரிகள் சோதனையிட்டனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 9.7 கிலோ தங்க கட்டிகள் மற்றும் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர்பட்டணம் கமருதீன் மகன் முகம்மது ராசிக் 33, சாகுல் ஹமீது மகன் பைஸ் அகமது 28, சாகுல் ஹமீது மகன் ஜாசிம் அகமது 22, புஹாரி மகன் முகமது பாரூக் 25, ஜாபர் மகன் ஜெய்னுல் பயாஸ்கான் 20, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்வளைகுடா கடல் பகுதியில் 19 தீவுகள் உள்ளன. இதில் பல தீவுகள் கடத்தல்காரர்களின் புகலிடமாக உள்ளன. குறிப்பாக மனாளி தீவில் ஏற்கனவே பலமுறை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE