நாகப்பட்டினம்:லஞ்சம் வாங்கி கைதான, நாகை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் நடந்த சோதனையில், 63 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகம், சென்னையில் உள்ளது. இதன் கீழ், 38 மாவட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து, காற்று, நீர், புகை உள்ளிட்ட மாசு இல்லை என, தடையின்மை சான்று அளிக்கின்றனர். மேலும், உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக, தனராஜ், 56, என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், திருவாரூர் மாவட்ட பொறுப்பையும், கூடுதலாக கவனித்து வந்தார்.இவரிடம், திருவாரூர் மாவட்டம், தண்டலையைச் சேர்ந்த துரைசாமி என்பவர், தன் அதிநவீன அரிசி ஆலைக்கான காற்று மற்றும் நீர் மாசு உரிமத்தை புதுப்பிக்க அணுகியுள்ளார். தனராஜ், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
துரைசாமி, திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் இரவு, தன் அலுவலகத்தில், லஞ்ச பணத்தை தனராஜ் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்; அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.நாகையில், தனராஜ் தங்கி இருந்த அறையில், 3.82 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில், தனராஜின் வீடு உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, படுக்கை அறை, சோபா என, பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 59 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதில், 2 லட்சத்து, 66 ஆயிரத்து, 500 ரூபாய், பழைய செல்லாத நோட்டுகளாக இருந்தன.
தனராஜ் வீடு, அலுவலகம் என, பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இவர் லஞ்சமாக வாங்கி குவித்த மொத்தம், 62.82 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்தும், விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE