சென்னை:மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துவக்கி வைத்தார்.
இதன் தொடக்கமாக, ஏழு மீனவர்களுக்கு, படகுகளுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், 2,000 இழுவலை படகுகளுக்கு பதிலாக, புதிதாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த, 2017 - 18ம் ஆண்டில், முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற, மத்திய அரசு பங்குத் தொகையுடன், தமிழக அரசு, 286 கோடி ரூபாயை ஒதுக்கியது.
படகின் விலை, 80லட்சம் ரூபாய். இதில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும் மானியமாக வழங்குகின்றன. பயனாளிகள், 10சதவீதம் செலுத்த வேண்டும்;20 சதவீதம் வங்கி கடனுதவிவழங்கப்படுகிறது.இதற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவர்களை உள்ளடக்கி, முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 95 ஆழ்கடல் படகுகளுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, 24 பயனாளிகளுக்கு, ஆழ்கடல் மீன்பிடிபடகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக,நாகப்பட்டினம், புதுச்சேரி, துாத்துக்குடி படகு கட்டும் தளங்களில் இருந்து, 12 கோடி ரூபாய் செலவில், 15 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இவை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட, மீனவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன.இதில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான எட்டு படகுகளை, புதுச்சேரி சிகாஜன் படகு கட்டும் நிறுவன தளத்தில் இருந்து, முதல்வர் பழனிசாமி., நேற்று முன்தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில்,ஏழு மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான, பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர்சண்முகம், மீன்வளத்துறை செயலர் கோபால்மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய விருது
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின், மூன்று ஆண்டு செயல்பாடுகள் அடிப்படையில், 'மீன்வளத்துறையில் அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறந்த செயல்பாடு' என்ற பிரிவின் கீழ், உரிய கருத்து, மத்திய அரசின் மீன்வளத்துறைக்கு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முகமை வழியே சமர்பிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், சிறந்த நிறுவனமாக, மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. நவ., 21ல், டில்லியில் நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், நேற்றுமுன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE