உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
தமிழகம் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களைக் கண்டிருக்கிறது. அதில் பலரும் அரசுக் கட்டிலை அலங்கரிக்க முயன்றாலும், ஒரு சிலருக்கே அந்தப் பாக்கியம் கிடைத்து, அரியணை ஏறினர்.நீண்ட இழுபறிக்குப் பின், நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்க முடிவு செய்துள்ளார். சிறுவர் முதல் முதியோர் வரை, அனைவராலும் ரசிக்கக் கூடியவர் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. அது தான், அவரின் மிகப்பெரும் பலம்.
நேர்மையான வழியில் தான், அவர் சம்பாதித்து வருகிறார். விளம்பரம் இன்றி, ஏழை, எளியோர் பலருக்கு உதவி செய்துள்ளார். சினிமாவில், 'மேக்கப்' உடன் நடித்தாலும், நிஜத்தில் அவர் இயல்பான தோற்றத்தில் தான் காணப்படுகிறார். அவரின் எளிமையை, அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர் என்பதால், நேர்மையாளராக மதிக்கப்படுகிறார். அதனால் தான், அவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்றதும், நடுநிலையாளர் அனைவரும் திருப்தி அடைந்தனர்.
அவரின் அரசியல் வருகையை வரவேற்கின்றனர்.'நான் முதல்வர் வேட்பாளர் இல்லை' என அறிவித்திருப்பதன் மூலம், பலரின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து, அவர்களின் வாயை மூடிவிட்டார்.ரஜினியின் அரசியல் வருகை, பல கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இப்போதே, 'துண்டு' போட்டு விட்டார்.பத்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை சுவைக்க முடியாத, தி.மு.க.,வும் கலக்கத்தில் உள்ளது.

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும், மக்கள் வேதனையை அனுபவித்து உள்ளனர். எனவே ரஜினி, ஆளும் அல்லது ஆண்ட கட்சியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது.அக்கட்சிகளின் அராஜகங்களை, மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தான், ரஜினியின் வருகையை மக்கள் பார்க்கின்றனர்.'என் வழி, தனி வழி' என்பது போல, வரும் சட்டசபைத் தேர்தலில், தனித்தே நின்று சாதிக்க வேண்டும். கூட்டணி அமைத்தால், பத்தோடு பதினொன்று என, கணக்கில் அடங்கி விடுவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE