ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் கனமழையால் கொத்தையம் நல்லதங்காள் அணை இரண்டாம் முறையாக மறுகால் சென்றது. பரப்பலாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்களாக பலத்த மழை பெய்வதால், கொத்தையம் நல்லதங்காள் அணை பயன்பாட்டிற்கு வந்த ஆண்டிலேயே இரண்டாவது தடவையாக நிரம்பி மறுகால் செல்கிறது.ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 85 அடிக்கும் மேல் உயர்ந்து, விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. உபரி நீர் நங்காஞ்சி ஆற்றில் திறந்துவிடப்படும் என்பதால் இதன் கீழ் உள்ள முத்துசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், முத்துபூபாளசமுத்திரம், பெரியகுளத்திற்கு நீர்வரத்து ஏற்படும். இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி கிடைக்கும்.
விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி:பரப்பலாறு அணை நிரம்பி வருவதால் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்குப்பின் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயம் செழிக்கும் நிலை உருவாகியுள்ளது, என்றார்.விவசாயி ராஜ்குமார்:இந்த ஆண்டே நல்லதங்காள் அணை இரண்டாம் முறையாக நிரம்பி மறுகால் சென்றுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE