திண்டுக்கல் : மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் இதில் பங்கேற்றனர்.
ஏற்கனவே, அரசு மருத்துவமனை முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்தும், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாவட்டம் முழுவதும் 120 பல் மருத்துவ மனைகள், 500 க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் உட்பட 700 மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. அவசர மற்றும் கொரோனா சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை போராட்டம் நடந்தது.இந்திய பல் மருத்துவ சங்க திண்டுக்கல் செயலாளர் ஆனந்த் யோகேஷ் கூறியதாவது: மத்திய அரசு ஆயுஷ் முலம் சித்தா, ஆயுர்வேதா, யோகா, மற்றும் யுனானி படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆயுஷ் மருத்துவ கல்லூரி விதிகளின்படி அவர்கள் பட்ட மேற்படிப்பு படிக்கலாம். ஆனால் அவர்கள் நவீன அலோபதி முறையில் பட்ட மேற்படிப்பில் பயிற்சி பெறுவது ஏற்புடையதல்ல. இதனால் மருத்துவர்களின் தரம் குறைந்து விடும். நவீன மருத்துவத்தில் இந்தியா முன்னோடியாக விளங்கும் சூழலில், இதனை ஏற்க முடியாது. மத்திய அரசு இதனை வாபஸ் பெற வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE