திருப்பூர்:பசுமை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் உருவான ஆண்டிபாளையம் குளம், பல மாதங்களாக பூட்டப்பட்டதால், பாழடைந்து போயுள்ளது.திருப்பூர் மாநகராட்சியின், 60வது வார்டில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தை, 'வெற்றி' அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால், மக்கள் கரசேவையுடன் குளம் புனரமைக்கப்பட்டது.குளக்கரை பலப்படுத்தப்பட்டு, கருங்கல் பதித்தும், குளத்துக்குள் தீவுகள் உருவாக்கப்பட்டது. கலெக்டரின் விருப்புரிமை நிதியில், குளக்கரையில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் மங்கலம் ஊராட்சியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் விளையாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இடையே, பூங்காவை பராமரிப்பது யார் என்ற போட்டியால், சிறுவர்பூங்கா கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் பூட்டப்பட்ட பூங்கா, பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. முட்செடிகள் முளைத்தும், பூங்காவுக்குள் செல்ல முடியாதபடி புதர் மண்டியும் பாழடைந்து போயுள்ளது. விரைவில் பூங்காவை திறக்க வேண்டுமென சிறுவர், சிறுமியர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பசுமை அமைப்பினர் முயற்சியால், பூங்கா உருவாக்கி, பயன்பாட்டில் இருந்தது. பூங்கா பராமரிப்பு பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ஆண்டிபாளையம் குளக்கரையில் உள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, பராமரிக்க வேண்டும். தன்னார்வலர் பங்களிப்புடன் புதிய விளையாட்டு கருவி பொருத்த, மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE