திருப்பூர்;கொரோனா ஊரடங்கால் பாதித்த ஏழை மக்கள், தேசிய வேலை உறுதி திட்டத்தில், 200 நாள் பணி வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் தேசிய வேலை உறுதி திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
ஊராட்சி அளவில், 15 முதல், 20 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கி, 'கிளஸ்டர்' முறையில் பணி ஒதுக்கப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி, தினக்கூலியாக, 252 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சராசரியாக, 190 ரூபாய் தொழிலாளருக்கு கிடைக்கிறது. மண் வேலை மட்டுமல்லாது, மரம் நடவு மற்றும் பராமரிப்பு, புதிய கட்டடங்கள், தடுப்பணைகள், சிறு தடுப்பணைகள் உருவாக்கம், பண்ணைக்குட்டை, மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழி, மண் வரப்பு அமைத்தல் என, பயனளிக்கும் பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
கொரோனா ஊரடங்கால், கிராமப்புற மக்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டதால், கிராமப்புற மக்கள், வேலை உறுதி திட்டத்தில் இணைந்து, பணிக்கு செல்கின்றனர். இதுவரை, அடையாள அட்டை போடாதவர்களும், புதிதாக இணைந்து, தினக்கூலிக்கு பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, வேலை உறுதி திட்ட பணிகள் துவங்கிவிட்டன. இருப்பினும், கொரோனா தொற்று பாதித்த ஊராட்சிகளில், 20 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. கிராமப்புற மக்களுக்கு, கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து, இயல்பு நிலைக்கு திரும்ப, வேலை உறுதி திட்டம் பெரும் உதவிகரமாக இருக்கிறது.
வருவாய் இன்றி தவிப்பதால், கூடுதலாக, 50 நாட்களாவது பணி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.நுாறுநாள் திட்ட பணியாளர் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கு வந்த பிறகு, ரேஷன் அரிசி இல்லையெனில், சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்திருக்கும். நுாறு நாள் திட்டம் இருப்பதால், எப்படியே சிரமப்பட்டு, குடும்ப செலவை சமாளித்து வருகிறோம். பாதிப்பை உணர்ந்து, 100 நாள் என்பதை, 200 நாட்களாக அதிகரித்து கொடுத்தால், கிராமப்புற ஏழை மக்களின் துயரம் தீரும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE