அவிநாசி;திருப்பூர் மாநகராட்சிக்கு, கூடுதலாக தண்ணீர் செல்வதால், அவிநாசி உள்ளிட்ட வழியோர பகுதிகளுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம், பவானி நீர் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அன்னுார், அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், திருப்பூர் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இதில், இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ், அவிநாசி பேரூராட்சிக்கு மட்டும், தினசரி, 14 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட வேண்டும். அதே போன்று, திருப்பூர் மாநகராட்சி பகுதி உட்பட, பிற உள்ளாட்சிகளுக்கும், கணிசமான அளவு தண்ணீர் வினியோகிக்கப்பட வேண்டும்.ஆனால், கடந்த மூன்று நாட்களாக, இத்திட்டத்தின் கீழ், தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது; மிக சொற்ப அளவு தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுவதால், குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது; மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இப்பிரச்னை, சபாநாயகர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தண்ணீர் வினியோகம் என்பது போதிய அளவு இல்லாததால், உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இப்பிரச்னை அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சம் கூட ஆளும் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி துவங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE