இரவு நேரத்தில், வயல்வெளியிலும், வீட்டு கூரையிலும் ஆந்தையின் குரலை இன்றைய இளைய தலைமுறையினர் கேட்டிருக்க மாட்டார்கள். 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் ஆந்தை குரலை வேண்டுமானால், கேட்டு ரசிக்கலாம். ஆந்தை இனம் அழிவு பாதையில் செல்கிறது என்பதை உணர்த்தவே இந்த பதிவு.நம்மை வாழவைக்கும் இந்த மாபெரும் இயற்கை அற்புதமானது. அதன் ஒவ்வொரு அங்கமும் பல்லுயிர்களுக்கான வாழ்வாதாரம். இந்த இயற்கையின் அழகான படைப்புகளான பறவைகள். இயற்கை அன்னையை காப்பதிலும், விவசாயிகளுக்கு உதவுவதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி விவசாயிகளின் நண்பனான 'புள்ளி ஆந்தை' (ஸ்பாட்டெட் ஓவ்லெட்) குறித்தும், மனிதர்களுடனான அதன் தொடர்பையும் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், 29க்கும் மேற்பட்ட ஆந்தைகள் இருந்தாலும், இந்த ஆந்தை இந்தியா முதல் தென்கிழக்கு ஆசிய கண்டம் வரையில் பரவலாக காண முடிகிறது. 21 - 23 செ.மீ., உயரமுள்ள இவற்றின், உடலெங்கும் சாம்பல் நிறமாகவும், வெள்ளை நிற புள்ளிகளுடன் அழகாக காணப்படும். பெரும்பாலும், நவ., முதல் ஏப்., வரையில் இனப்பெருக்க காலம். ஆண்டுக்கு அதிகபட்சமாக, 3 - 4 முட்டைகள் இடும்.பெரும்பாலும் விளைநிலங்கள் அருகிலும், மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், மரப்பொந்துக்களில், இலைகள், இறகுகள் மூலம் கூடமைத்து வாழ்கின்றன. எப்போதும், மூன்றுக்கும் மேற்பட்ட ஆந்தைகளுடன் கூட்டமாக வசிக்கின்றன. விளைநிலங்களில் உலாவும், எலி, வண்டுக்கள், பூச்சிகள், கரையான்களை இரையாக்கி விவசாயிகளுக்கு பயிர்களை காக்கும் நண்பனாக, படை வீரனாக இந்த ஆந்தைகள் செயல்படுகின்றன.பத்தாண்டுகளுக்கு முன், இந்த ஆந்தையை எளிதாக காணலாம். ஆனால், இன்றோ விவசாயிகள் பயன்படுத்தும், பல்லுயிர்களை காவு வாங்கும், அதீத ரசாயன பூச்சிக்கொல்லி, களைக் கொல்லியால், 'புள்ளி ஆந்தை' இனம் அரிதாகி வருகிறது.ரசாயனத்தால் பாதித்த பூச்சிகள், வண்டுகளை சாப்பிட்டு, இவற்றின் மரபணுவில் பெரும் மாற்றம் நிகழ்ந்து, பறப்பது, இரை தேடுவது என, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கிறது. ரசாயனம், பருவ நிலை மாற்றம் என, பல பாதிப்புகளால், 'அழிவு' என்ற நேர்கோட்டுப்பாதையில் அதிவேகத்தில் பயணித்து வருகிறது.இதே நிலை தொடர்ந்தால், 'புள்ளி ஆந்தை' மட்டுமல்ல, அனைத்து வகை பறவைகளின் வாழ்வும், பறவைகளை நம்பி இருக்கும் இயற்கையின் ஆரோக்கியமும் கேள்விக்குறி தான். பறவைகளை காப்போமென உறுதியேற்று; ரசாயனத்தை தவிர்த்தால் மட்டுமே, நாமும் வாழத் தகுதியான பூமியாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE