உடுமலை:காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்க, பந்தல் அமைப்பதற்கான மானியத்தை, தோட்டக்கலைத்துறை சார்பில், செயல்படுத்த வேண்டும் என குடிமங்கலம் ஒன்றிய விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், கிணற்று பாசனமே, விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், நீண்ட கால பயிரான, தென்னைக்கு மாற்றாக, காய்கறி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.தற்போது, நிரந்தர வருவாய் கிடைக்க, பந்தல் அமைத்து, புடலை, பீர்க்கன், பாகற்காய் உட்பட காய்கறிகளை, விளைவிக்க, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், அம்மாபட்டி உட்பட பகுதிகளில், பந்தல் சாகுபடி முறைக்கு பெரும்பாலான விவசாயிகள் மாற ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால், கற்களை நட்டு, பந்தல், அமைக்கும் முறைக்கு, அதிக செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு, 1 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவிட வேண்டியுள்ளதால், சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.ஆர்வம் இருந்தும், முதலீடு செய்ய வழியில்லாமல், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், மானியம், வழங்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு, முன், கல் பந்தல் அமைத்து, காய்கறி சாகுபடி செய்யும் முறைக்கு, அரசு மானியம் வழங்கி வந்தது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில், காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE