அன்னுார்;அன்னுார் பேரூராட்சியில், கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இரு மாதங்களில், பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு ஏற்பட உள்ளதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அன்னுார் பேரூராட்சியில், 24 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டம் மற்றும் வேடர் காலனி குடிநீர் திட்டத்தில், 5,200 வீட்டு குடிநீர் இணைப்புகளிலும், 105 பொது குழாய்களிலும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பேரூராட்சியின் தினசரி தேவை, 22 லட்சம் லிட்டராக இருக்கிறது. ஆனால், இரு குடிநீர் திட்டங்கள் இருந்தும், 13 லட்சம் லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுாரில் மின்சார நிறுத்தம், குழாய் உடைப்பு, மோட்டார் பழுது, நீர் அழுத்தம் குறைவு என பல காரணங்களால், பேரூராட்சியில், 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.2018ல் துவக்கம்திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு, 12 மணிநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த, பொது குழாய்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், சூலுார், பல்லடம், திருப்பூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ள, 155 குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு, நாளொன்றுக்கு, இரண்டு கோடி லிட்டர் தண்ணீர் வினியோகிக்கும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடந்த, 2018 அக்., மாதம் துவங்கியது. நபார்டு மற்றும் ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதில், நபார்டு 163 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது.இருக்காது தட்டுப்பாடுபேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுமைதாங்கி பகுதியில், ஒரு கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும் நிலைய பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அன்னுார் பேரூராட்சியில், வார சந்தை வளாகத்தில், ஒரு லட்சத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டியும், பம்ப் ஹவுசும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.குமரன் நகர் மற்றும் ஆலாம்பாளையத்தில், தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிகளும், சொக்கம்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையத்தில், தலா, ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பேரூராட்சியில் பிரதான குழாய் மற்றும் கிளை குழாய் என, 30 கி.மீ., துாரத்துக்கு பதிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் இரு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.பணி முடிந்தால், அன்னுார் பேரூராட்சிக்கு, தினமும், 50 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கும். எனவே, இரு மாதங்களில், தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடப்பதாலும், இரு மாதங்களில் பணி நிறைவடைந்து, தற்போது வரும் நீரை விட, மூன்று மடங்கு நீர் வழங்கப்பட உள்ளதாலும், அன்னுார் மக்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE