தமிழர்களின் இசைக் கருவிகளில் யாழும் குழலும் முக்கியமானவை. புல்லாங்குழலையும் சங்க இலக்கியத்தில் குழல் என்று குறிப்பிடுவர். நாதஸ்வர இசைக் கருவியும் குழல் தான். இசை என்பது மொழிகளை கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.சினிமா ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன், பத்மினி நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' என்ற திரைப்படம் ஞாபகம் இருக்கலாம். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் பிரமாதமாக நடித்தது தான் என்பதை மறக்கமுடியாது. அவர் ஒரு உண்மையான நாதஸ்வரக் கலைஞன்போல மூச்சடக்கி வாசிப்பதையும், ஒரு கலைஞனுக்குரிய கர்வம் அவர் கண்களில் பளிச்சிடுவதையும் ரசிகர்களால் உணரமுடிந்தது. நாதஸ்வரம், கடவுளுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு சேவை என்று கூட சொல்லலாம். பெரும்பாலும், கோவில்களில் வாசிக்கப்படுகிறது.அது போன்ற ஒரு சேவையில் ஈடுபட்டு வருகிறார், காரமடையை சேர்ந்த ஒருவர். பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு அருகே, நாய்க்கனுாரை சேர்ந்தவர் வெங்கட்ராமையா. இவரது மனைவி நாச்சம்மாள். வெங்கட்ராமையா மைசூர் கோவிலில், நாதஸ்வர வித்வானாக இருந்ததால், அங்கிருக்க வேண்டிய நிலை. இவர்களது மூன்றாவது மகன் ராஜகோபால், எட்டாம் வகுப்பு வரை, மைசூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். பின், குருகுலத்தில் சேர்ந்து, இசையை விருப்பப் பாடமாக எடுத்து படித்தார்.தொடர்ந்து, பத்து ஆண்டுகள், நாதஸ்வர கலைகளை கற்றுத் தேர்ந்தார். பின், மைசூர் அருகே மாதேஸ்வரா கோவிலில் நாதஸ்வர கலைஞராக சேர்ந்தார். கோவிலில், 25 ஆண்டுகள் பணி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகனும், நாதஸ்வர கலையில் டிப்ளமோ முடித்து, திருமணம், கோவில் உட்பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.இந்நிலையில், மைசூரிலிருந்து, மேட்டுப்பாளையம் காரமடைக்கு குடிபெயர்ந்த ராஜகோபாலுக்கு, தற்போது வயது 73. இன்னமும், காரமடை அரங்கநாதர் கோவிலில், கடவுளுக்கு இசை சேவை செய்து வருகிறார். தனது மூச்சுக்காற்றை, நாதஸ்வரத்தின் வழியாக, இசையாக மாற்றி, கோவிலில் நடக்கும் அனைத்து வைபவ நிகழ்ச்சிகளுக்கு தகுந்தாற்போல் வசித்து வருகிறார். முக்கிய விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்கு, இவர் அவ்வளவு பரிட்சியம்.இதுகுறித்து, ராஜகோபால் கூறியதாவது:பெங்களூரில் உள்ள ஆல் இந்திய ரேடியோ, துார்தர்ஷன் ஆகிய நிலையங்களில், நாதஸ்வரம் வாசித்துள்ளேன். மேலும், காஞ்சியில் 'ஆசான் வித்துவான்' என்ற விருதும், மைசூரில் 'கலா தீப்தீ' என்ற விருது உட்பட, ஐந்து விருதுகள் பெற்றுள்ளேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான காரமடை வந்து, அரங்கநாதர் பெருமாளுக்கு இசை சேவை செய்து வருகிறேன்.எனது தாத்தா வீராசாமி, தந்தை வெங்கட்ராமையா ஆகியோர் நாதஸ்வர வித்வான்கள். அந்த வகையில், இசை மீது எனக்கு இருந்த மோகத்தால், நானும், எனது மகனும் நாதஸ்வர கலையை கற்றுள்ளோம். பரம்பரை, பரம்பரையாக நாதஸ்வர கலையை, உயிர்மூச்சாக வாசித்து வருகிறோம். கடவுளை நினைத்து நாதம் வாசிக்கும்போது, கடவுள் என்னுள் இருந்து இசையை இசைக்கிறார் என்று, ஒவ்வொரு நாளும் நினைத்து வருகிறேன்.இந்த முதிர்ந்த வயதிலும் கடவுளுக்கு சேவை செய்வதே, கடமையாக செய்து வருகிறேன். இருந்த போதும் போதிய வருவாய் இல்லாமல் சிரமம் ஏற்படுகிறது. நலிந்த இசைக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகை கேட்டு, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். எனக்கு உதவித்தொகை வழங்கினால், உயிர் மூச்சு உள்ளவரை, கடவுளின் புகழ் பாடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE