கோபி: நம்பியூர் யூனியன் நிர்வாகத்தின் சாதாரண கூட்டம், யூனியன் அலுவலகத்தில், நேற்று நடந்தது. சேர்மன் சுப்பிரமணியம் தலைமையில், பி.டி.ஓ., பாவேசு, 13 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள், முருகேசன், கோமதி மற்றும் லோக சம்பத்(காங்.,) கூறியதாவது: யூனியனில் வளர்ச்சி பணிக்காக, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கிராம சாலைகள் திட்டத்தில், தேவையின்றி செலவு செய்து, நல்ல நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புக்கு நிதி ஒதுக்காமல், தேவையற்ற பணிக்கு, நிதி ஒதுக்கீடு செய்வதை கண்டிக்கிறோம். அடிப்படை வசதிக்காக, உள்ளாட்சி அமைப்புக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். வெடிக்காரன்பாளையம் காலனி மற்றும் பழையூர் காலனியில் சேதமான, 50 வீடுகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம், புலியூர் ஊராட்சியில், சிப்காட் அமைக்க, அரசு முனைப்புடன் உள்ளது. இதனால், எம்மாம்பூண்டி, பொலவபாளையம், வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம், அஞ்சனூர் பகுதிகளி,ன் நீர்வரத்து பகுதிகளில் கழிவு கலக்கும். எனவே, இத்திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதே பிரச்னையை வலியுறுத்தி, சேர்மன் சுப்பிரமணியத்திடம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மனு வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE