ஈரோடு: சட்டசபை தேர்தலில், ரஜினிகாந்துடன் இணைந்து, அனைத்து தொகுதிகளிலும் அவர் கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம்,'' என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
ஈரோட்டில், பாரதியார் நூலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியார் தேசத்தலைவர். அவர் வந்து சென்ற இடத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, அவர் பிறந்த நாளில் மரியாதை செய்ய, கலெக்டர், அமைச்சர் என, யாரும் வரவில்லை. அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றோர் பிறந்த நாளில், அரசு இதுபோன்று நடந்திருக்குமா. பிரதமர் மோடி, பாரதியாரின் கனவு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழக முதல்வரும், நடைமுறைப்படுத்த வேண்டும். முருகன், காளி, பாரதமாதா மீது பாரதியார் பற்று வைத்து பாடியவர். அவர் கூறிய ஆன்மிக அரசியலை ஏற்று, பாரதியாரை வழிகாட்டியாக கொண்ட ரஜினிகாந்த், 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்வார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிகழும். சட்டசபை தேர்தலில், ரஜினிகாந்துடன் இணைந்து, அனைத்து தொகுதிகளிலும், அவர் கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம். அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்போம். இப்போதே தேர்தல் பணியை துவங்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE