சேலம்: தடத்தை ஆக்கிரமித்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்றனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பெத்தேல் காலனி மக்கள், காலி குடம், சமையல் பாத்திரங்களுடன், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்தனர். பாதுகாப்பு பணி போலீசார், அறிவுரை வழங்கிய பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சாலை வசதி கேட்டு முழக்கமிட்டனர். பின், கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பெத்தேல் காலனியில், 70 குடும்பத்தினர் வசிக்கிறோம். அதில், 50 பேர் தொகுப்பு வீட்டில் உள்ளனர். குடியிருப்புகளுக்கு தடமாக, 1978ல், அரசு தரப்பில், 1 கி.மீ., மண்சாலை நிறுவப்பட்டது. இது, டேனிஷ்பேட்டை பிரதான சந்திப்பில் இருந்து, பெத்தேல் காலனி வரையான, 20 அடி அகல சாலை. ஆனால், இருமுறை ஒப்பந்தம் விட்டும், தார்ச்சாலை பணி நடக்கவில்லை. இதுதொடர்பாக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும், சாலை வசதி கிடைக்கவில்லை. இந்நிலையில், சாலையையொட்டி விளைநிலம் வைத்திருப்பவர்கள், அங்குல அளவில், அடுத்தடுத்து சாலையை ஆக்கிரமித்து, தற்போது ஒத்தையடி பாதையாக மாற்றிவிட்டனர். தற்போது, அதையும் விடாமல், பாறாங்கல்லை வைத்து அடைத்து, மரக்கன்றுகளை நட்டு, ஒட்டுமொத்தமாக சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், 70 குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டதுபோல், வந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும், பல கி.மீ., சுற்றிவரும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், நேரில் முறையிட்டும் பலனில்லை. இதைக்கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE