சேலம்: சேலத்தில், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட, தனி துணை தாசில்தார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம், கலெக்டர் அலுவலக, முத்திரை கட்டண பிரிவில், தனி துணை தாசில்தாராக இருந்தவர் ஜீவானந்தம், 47. இவர், நிலத்தின் மதிப்பை குறைத்து சான்றிதழ் வழங்க, கடந்த, 10ல், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, கையும், களவுமாக சிக்கி கைதானார். பின், சேலம், காந்தி சாலை, ராஜமாணிக்கம் தெருவில் வசிக்கும் ஜீவானந்தம் வீட்டில், சோதனை நடத்தி, மனுதாரர் நிஷாந்த், 24, வழங்கிய விண்ணப்ப மனுக்கள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துணை தாசில்தார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. அதேநேரம், கைது ஆவணங்கள் உள்ளிட்டவை, கலெக்டருக்கு தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி, ஜீவானந்தம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க, சேலம் மாவட்ட தலைவராக உள்ளார். இரு ஆண்டு பதவி வகித்தவர், ஆறு மாதத்துக்கு முன் நடந்த சங்க தேர்தலில், மீண்டும் போட்டியின்றி தேர்வானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE