சேலம்: சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனரின் ஜீப்பில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 3.50 லட்சம் ரூபாய் சிக்கியது.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 57; சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 53 பேரூராட்சிகளுக்கு, உதவி இயக்குனராக உள்ளார். பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எலக்ட்ரிக் உபகரண பராமரிப்பு பணிக்கு செலவு செய்யப்படும் தொகைக்கு, இவரே அனுமதி அளிப்பார். இவருக்கு, சேலம், கலெக்டர் அலுவலகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அரசு வழங்கிய பொலிரோ ஜீப்பில் சென்று, பேரூராட்சி எல்லை பகுதிகளில், வசூலில் ஈடுபட்டுள்ளார். தினமும் பணம் வசூலித்து, கோவைக்கு எடுத்துச்செல்வார். நேற்று வழக்கம்போல் சென்றபோது, சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அரியானூரில் ஜீப்பை மடக்கி, இரவு, 8:45 மணிக்கு சோதனை செய்தனர். இரு பைகளில், கணக்கில் வராத, 3.50 லட்சம் ரூபாய் இருந்தது. இதனால், வின்சென்ட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து, இரவு முழுதும் விசாரித்தனர். இதுதவிர, கோவை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்றனர். கனகராஜ் வர தாமதமானதால், விபத்தில் ஏதும் சிக்கியிருக்கலாம் எனக்கருதி, வீட்டில் உள்ளவர்கள், காரில் சேலம் புறப்பட்டது தெரிந்தது. இதையறிந்த போலீசார், அவர்களை மடக்கி வீட்டுக்கு அழைத்து வந்து, நள்ளிரவு, 11:20 மணிக்கு, சோதனையை தொடங்கி, நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE