எண்ணுார்: எண்ணுாரில், அரை நுாற்றாண்டு கண்ட மருத்துவமனை மூடப்பட்டதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த, அனல் மின் நிலைய ஊழியர் குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை, எண்ணுார் அனல் மின் நிலையம், பழமை காரணமாக, 2017ல் மூடப்பட்டது.
இடமாற்றம்
இங்கு பணியாற்றிய, 570 பேரும், வடசென்னை அனல் மின் நிலையம், ஒன்று மற்றும் இரண்டிற்கும் மாற்றப்பட்டனர்.பின், நிர்வாக காரணங்களுக்காக, சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனாலும், அவர்கள் வசிக்கும் அனல் மின் நிலைய குடியிருப்புகள், மூடப்பட்ட எண்ணுார் அனல் மின் நிலையத்தை, சுற்றியே உள்ளது.மூன்று பிரிவுகளாக உள்ள குடியிருப்புகளில், 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள், குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இவர்கள் பயன்பெறும் வகையில், எர்ணாவூர் குப்பம் அருகே, 1971ல் துவங்கிய அனல் மின் நிலைய இலவச மருத்துவமனை உள்ளது.
படையெடுப்பு
இதில், ஊழியர் குடும்பத்தினர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தோரும் பயனடைந்தனர். இங்கு, இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதி உள்ளிட்ட அனைத்தும் இருந்தன.அனல் மின் நிலையம் மூடும் வரை, மருத்துவமனை சீராக இயங்கியது. பின், ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர், ஒரே ஒப்பந்த செவிலியர் என, மருத்துவமனைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.கடந்த, செப்., 30ம் தேதி, மருத்துவமனை மூடப்பட்டது. இங்கு பணியாற்றியோர், வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.இதனால், அனல் மின் ஊழியர் குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டார மக்கள், ஏமாற்றம் அடைந்தனர்.அனல் மின் நிலைய நிர்வாகம் கவனித்து, அரை நுாற்றாண்டாக செயல்பட்ட, மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE