ஓசூர்: சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை, மழைநீரை மட்டுமே நம்பியுள்ளதால், நிரம்பாமல் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, புளியரசி, பீளாளம், அணாசந்திரம், தொட்டி, மாரண்டப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அடிப்படையில், சூளகிரி அருகே சின்னாறு அணை கட்டப்பட்டது. அணை நிரம்பினால், 2,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மழை நீரை மட்டுமே நம்பியுள்ள இந்த அணை, 2017 அக்.,ல், நிரம்பியது. அதன் பின் போதிய மழை இல்லாததால், அணையில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
இது குறித்து, கிருஷ்ணேகவுனப்பள்ளியை சேர்ந்த விவசாயி நரசிம்மமூர்த்தி, 55, கூறியதாவது: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், முதலில் மருதாண்டப்பள்ளி ஏரி வரை வந்தது. அங்கிருந்து, இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில், சூளகிரி துரை ஏரி வரை புதிய கால்வாய் வெட்டப்பட்டதால், துரை ஏரி வரை, தற்போது தண்ணீர் வருகிறது. அதன் அருகே உள்ள, சின்னாறு அணைக்கு தண்ணீர் வரும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படும். மழை நீரை மட்டுமே நம்பியுள்ளதால், சின்னாறு அணை நிரம்புவதில்லை. எனவே, கெலவரப்பள்ளி அணையில் இருந்து, சின்னாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
கருங்கல் பகுதி விவசாயி பால்ராஜ், 61, கூறியதாவது: கெலவரப்பள்ளி அணையில் இருந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு செல்லும் உபரி நீர், தேவையில்லாமல் ஆற்றில் சென்று, கடலில் கலக்கிறது. அந்த நீரை, சின்னாறு அணைக்கு திரும்பி விட தயங்குகின்றனர். தற்போது, அணையில் தண்ணீர் இல்லாததால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE