பெருந்துறை: பெருந்துறையில் ஈமு பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி, பல கோடி மோசடி செய்த இருவருக்கு, டான்பிட் நீதிமன்றம், தலா, 10 ஆண்டு சிறை, 1.21 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பட்டகாரன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணுசாமி, 40, மோகனசுந்தரம், 41; இருவரும் அதே பகுதியில், ஆர்.கே.ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தை, 2012ல் துவங்கினர். நிறுவனத்தில் முதலீடு செய்தால், பல மடங்கு தொகை தருவதாக, கவர்ச்சி அறிவிப்பு விளம்பரம் செய்தனர். இதை நம்பி, 110 முதலீட்டாளர்கள், இரண்டு கோடியே, 40 லட்சம் ரூபாயை முதலீடு செய்தனர். 14 மாதத்துக்கு, 6,000 ருபாய் வீதம் வழங்கப்படும். மூன்றாண்டு முதிர்வடைந்த பின், முதலீட்டாளர் செலுத்திய தொகை திரும்பி தரப்படும் எனக்கூறினர். ஆனால், மாத தொகை, முதிர்வு தொகை வழங்கவில்லை. இதுகுறித்து, பெருமாம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், பெருந்துறை போலீசில், 2012 நவ.,10ல் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிந்த நிலையில், ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இருவர் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நவ.,16ல் போலீசார் கைது செய்தனர். கடந்த, 2014 ஜன.,28ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருவரும் ஜாமினில் வெளியில் வந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்தது. இதில், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் இருவருக்கும் தலா, 10 ஆண்டு சிறை, இருவரும் சேர்ந்து, ஒரு கோடியே, 21 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு, நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். கண்ணுசாமி, மோகனசுந்தரம் நேற்று நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனால், இருவருக்கும் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE