பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம், 140 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவால், போக்குவரத்துக்கழகம் இலக்கை எட்டுமா என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த, 2019ல், பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, சொந்த ஊர் சென்ற பயணியர் எண்ணிக்கை ஆறு லட்சம், தொழில்நகரங்களில் இருந்து சென்றவர் எண்ணிக்கை, எட்டு லட்சமாக இருந்தது. 2020 பொங்கலில், சென்னை பயணியர் எண்ணிக்கை, எட்டு லட்சம், தொழில் நகர பயணியர் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர்ந்தது. அதேபோல், 2019ல், பொங்கல் சிறப்பு பஸ்களின் வருவாய், 109.53 கோடி ரூபாயாக இருந்தது, 2020 பொங்கலில், 129.35 கோடி ரூபாயாக
உயர்ந்தது.
பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு: கொரோனாவால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு, தீபாவளி சிறப்பு பஸ்களின் வருவாய் சரிந்தது. இதனால், பொங்கல் பண்டிகை வருவாய் உயர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம், 140 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதற்கேற்ப, சிறப்பு பஸ்களின் முன்பதிவு, வழக்கமாக, டிச., 20ல் தொடங்கப்படும் நிலையில், நடப்பாண்டு, கடந்த, 8ல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனாவால் இலக்கை எட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜன., 18 வரை...: இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: பிரபல ஆம்னி பஸ் நிறுவனங்கள், இயக்கத்தை தொடங்காமல் உள்ளதால், முன் பதிவையும் தொடங்கவில்லை. இதனால், அரசு பஸ்களின் முன்பதிவை முன்கூட்டியே தொடங்கி உள்ளோம். இதன்மூலம், வருவாயில் கணிசமான அளவில் உயர்வு ஏற்படும். கடந்த ஆண்டை போல், நடப்பாண்டு, ஜன., 10 முதல், சிறப்பு பஸ்களின் இயக்கம் தொடங்கி, ஜன., 18 வரை இயக்கப்படும். மேலும், 140 கோடி ரூபாய் இலக்கை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE