திருப்பரங்குன்றம்: 'கொள்ளையடிக்கவே 2021ல் தி.மு.க, ஆட்சிக்கு வரத் துடிக்கிறது,' என அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 2021 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., ஆலோசனைகள் கூறினார்.
அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது: தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் மட்டுமின்றி பிரதமரே பாராட்டுகிறார்.ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் வேதனையில் வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊழல் செய்து பணம் சேர்த்ததை தவிர தி.மு.க., ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் செய்த திட்டங்களைக் கூறி ஓட்டு கேட்க யோக்கியதை இருக்கிறதா. கொள்ளையடிப்பதற்காகவே தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வர துடிக்கிறது.தி.மு.க., குடும்ப ஆட்சி கனவை மக்கள் தவிடு பொடியாக்க வேண்டும்.2ஜி வழக்கில் விபரங்கள் சரியாக கொடுக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்ததாக நீதிபதி கூறினார். ராஜா, கனிமொழி குற்றமற்றவர்கள் என நீதிபதி தீர்ப்பு கூறினாரா.இந்த வழக்கை போட்டதே, மத்திய ஆட்சியில் தி.மு.க., அங்கம்வகித்த காங்கிரஸ் தானே.ராஜா தற்போது பேசியதுபோல் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பேசியிருந்தால் அவரது நாக்கை அறுத்திருப்போம். சைக்கிளில் சென்ற ராஜா தற்போது வெளிநாட்டு காரில் செல்கிறார்.
செல்வாக்கு எப்படி வந்தது. ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மதுரை வந்தபோது என்ன மரியாதை கிடைத்ததோ அதே மரியாதை ராஜா மதுரை வந்தாலும் கிடைக்கும்.தி.மு.க., நடத்திய கூட்டத்தில் தொண்டனை நாய் என கூறியவர்தான் இந்த ராஜா. இறந்தவரைப்பற்றி தரம் தாழ்ந்து பேசுகிற அவருக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டியதில்லை. நாங்களே போதும்.தமிழகத்தில் பழனிச்சாமி அலை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. 2021ல் மீண்டும் அ.தி.மு.க,. ஆட்சி அமையும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE