விருதுநகர்: தியானம் செய்வது, வழிபடுவது, அதை தொடர்ந்து வழியில்லாதவர்களுக்கு தர்மம் செய்வது போன்றது மானுட பண்புகளில் உயர்ந்தது.
அதிலும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு உணவளிப்பது ஆத்மார்த்தமான பண்புகளில் ஒன்று. அதை ஆன்மிகவாதிகள் பலரும் செய்து வருகின்றனர். தற்போதைய சூழலில் காற்று, நீர் என அனைத்துமே மாசுபட்டு விட்டது. விலங்குகள் அனைத்தும் நீராதாரம், உணவு போன்ற அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டு வயல்வெளி, குடியிருப்புகளுக்குள் வந்து செல்கின்றன. நம்மால் காடுகளை உருவாக்க முடியாது ஆனால் நம்மை நாடி வந்திருக்கும் அவற்றிற்கு உணவளிக்க முடியும்.
அவற்றை துரத்தாமல் உணவை பகிர்ந்தளிப்பதே நாம் வணங்கும் கடவுளுக்கு நாம் செய்யும் உபகாரம். விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குபட்டியில் கடை வியாபாரி ஆனந்தகுமார் குடியிருப்புகளை சுற்றி வரும் குரங்குகளுக்கு தினசரி ரூ.300க்கு வாழை பழங்கள் வாங்கி உணவளிக்கிறார். அவைகளும் மிகுந்த ஆர்வத்தோடு பழங்களை உண்டு செல்கின்றன. உணவளிப்பதில் முக்கிய பங்காற்றும் ஆனந்தகுமார் சிறுவயதில் இருந்தே இந்த ஈடுபாடோடு இருந்து வருகிறார். இவரது தந்தை ஆத்தியப்பனும் குரங்களுக்கு உணவளித்து வருகிறார். பொதுவாக சதுரகிரி போன்ற மலைகளுக்கு பக்தர்கள் ஏறும் போது குரங்குகளுக்கு பழம் தருவது வழக்கம். அதில் சிலர் பாலிதீன் தாள்களில் மிக்சர், காரசேவு போன்ற நொறுக்கு தீனிகளையும் கொடுக்கின்றனர். இதனால் அவற்றின் உணவு பழக்க வழக்கங்கள் மாறுகிறது என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனந்தகுமாரோ பழங்களை மட்டுமே குரங்குகளுக்கு உணவாக அளிக்கிறார்.
பணம் தந்து உதவும் மக்கள்
எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே உணவளிக்கிறேன். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. அப்போதெல்லாம் 50 குரங்குகள் வரை இருந்தது. தற்போது 25 குரங்குகள் வந்து செல்கின்றன. நேரடியாக பழங்கள் வாங்கி போட முடியாதவர்கள் கூட பணத்தை என்னிடம் கொடுத்து குரங்குகளுக்கு உணவளிக்க உதவுகின்றனர். என்னை பார்த்து பலர் உயிரினங்களுக்கு உணவளிக்க வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனந்தகுமார், கடை வியாபாரி, பாலவனத்தம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE