விருதுநகர்: தமிழகத்தில் முதல் மாதிரி தொழில்நெறி வழிகாட்டல் மையம் விருதுநகரில் 1998 ல் துவக்கப்பட்டது. இதை அப்போதைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் ஏற்படுத்தினார்.
இதன் மூலம் எட்டாக்கனியாக இருந்த ஏழை மாணவர்களின் அரசு வேலை என்பது எட்டும் கனி தான் என நிரூபிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் இலவசமாக பயின்ற எண்ணற்றோர் அரசுத்துறைகளில் பல்வேறு பணிகளை நிரப்பி பதவிகளுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.இம்மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 4, குரூப் 2ஏ, காவல்துறை, சிறைதுறை, தீயணைப்பு துறை, டெட், பேங்கிங் மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி தேர்வுகளுக்கு சிறந்த வல்லுனர்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் உறுப்பினர்கள் 1050 பேர் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள், இலவச நுாலகம், கம்ப்யூட்டர் வசதியான டிஜிட்டல் வகுப்பறைகள், இ-லேர்ன் வசதி, வினாடி வினா போட்டி, போட்டி தேர்வு வெற்றியாளர்களுடன் சந்திப்பு, மாதிரி போட்டி தேர்வு, மாதிரி நேர்முக தேர்வு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
'நான் புத்தகமான உன் முன் தலை குனிந்தேன்; இன்று பலர் முன் தலை நிமிர்ந்து நிற்கிறேன்....நன்றி புத்தகமே நன்றி,' என வாசிப்பு, கற்றல், போதித்தல் எனும் தாரக மந்திரத்தை அடி பிறழாமல் இயலாத மாணவர்களுக்கு நேரடியாக கற்றபித்து வரப்படுகிறது.இதன் விளைவு இன்று பலர் அரசு துறைகளில் உயர் பதவிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை, காவல், சிறை, தீயணைப்பு துறைகளில் காக்கி சட்டை சீருடையில் மிடுக்காகவும், நேர்மையாகவும், திறமையாகவும் சேவையாற்றி விருதுநகருக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.தொடர்புக்கு 04562 252 713.
நம்பிக்கையே வாழ்க்கை
கண் பார்வையற்று ஏழ்மையில் உள்ள எனக்கு இம்மையம் கிடைத்தது பெரும் பாக்கியம். பிரெய்லி முறைப்படி கற்று வருகிறேன். பிறர் கற்பிக்க அதை கேட்டு மனதில் நிறுத்தி படிக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை குரூப் 4 தேர்வு எழுதினேன். சொற்ப மதிப்பெண்ணில் வாய்ப்பு நழுவியது. இம்முறை கட்டாயம் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் அமர்வேன் என்பது உறுதி. நம்பிக்கையே வாழ்க்கைலட்சுமணன், மருளுத்து, விருதுநகர்.
முன்னாள் மாணவர் சேவை
இம்மையத்தில் படித்து அரசு வேலையில் எண்ணற்றோர் சேர்ந்துள்ளனர். அவர்களில் 120 முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஐந்தாயிரம் புத்தகங்கள், டிஜிட்டல் லைப்ரரி, கம்ப்யூட்டர் வசதிகள் ஏராளம். இம்மையம் ஏழை மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சேவையாற்றி வருகிறது. பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.ஆர்.சாந்தா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், விருதுநகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE