மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கியுள்ள ரசாயனக் கழிவால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணை நிரம்பினால், 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும்.நீர்மட்டம், 80 அடிக்கு மேல் இருக்கும்போது, பச்சை, நீல நிறத்தில் எண்ணெய் படலம் போன்ற ரசாயன கழிவு, அணை கரையோரத்தில் தேங்குகிறது.இதனால் எழும் துர்நாற்றம், பல கி.மீ., வரை வீசுவதால், கரையோர மக்கள், உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ரசாயன கழிவால் துர்நாற்றம் வீசியதால், அதை அழிக்க, சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, பொதுப்பணித் துறை சார்பில், பாசி படலத்தை எதிர்வினை புரிந்து அழிப்பதோடு, துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் திறனுாட்டப்பட்ட, 'பேசிலஸ் சப்டெய்லிங்' எனும் நுண்ணுயிரி, பாசி படலம் மீது தெளிக்கப்பட்டது.இதனால், துர்நாற்றம் குறைந்து, ரசாயன கழிவு படிப்படியாக அழிந்தது.

நடப்பாண்டு, மீண்டும் ரசாயன கழிவு உற்பத்தியாகி, கரையோர நீர்பரப்பு பகுதி, அணையின் 16 கண் மதகு பகுதியில் தேங்கியுள்ளது. இதன் மூலம், தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நடப்பாண்டும் பேசிலஸ் சப்டெய்லிங் நுண்ணியிரியை, ரசாயன கழிவு மீது தெளித்து, அழிக்கும் பணியை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரகுநாதன் குழுவினர், நேற்று மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கியுள்ள பாசி படலங்களை, சோதனைக்கு சேகரித்தனர்.

வாரியத்தின் மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''அணை நீர்பரப்பு பகுதியில், பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். ''அதிலுள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள், செடி, கொடிகளுடன் கலந்து மக்கி, நீரில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதை கட்டுப்படுத்த, விவசாயிகள், ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE