கரூர்: ''கரூர் மாவட்டத்தில், தி.மு.க., வை சேர்ந்த நிர்வாகிகள் திட்டமிட்டு, பல இடங்களில் ஓட்டுகளை வைத்துள்ளனர்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., வினர் பல இடங்களில் ஓட்டுகள் வைத்திருப்பதாக ஏதோ உத்தமர் போல (செந்தில் பாலாஜி) ஒருவர் பேட்டி கொடுத்து இருந்தார். ஆனால், தி.மு.க.,- ஐ.டி., விங்க் பொறுப்பாளர், மாவட்ட முன்னாள் பொருளாளர், பல, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓட்டுகளை வைத்து, வரும் தேர்தலில் கள்ள ஓட்டுகளை போட்டு, வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கின்றனர். தி.மு.க., நிர்வாகிகள், பல இடங்களில் ஓட்டுகளை வைத்துள்ளனர். கரூர் சட்டசபை தொகுதியில், 30 ஆயிரம் பேரையும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 20 ஆயிரம் பேரையும் சேர்த்துள்ளதாக, தி.மு.க., வினர் பொய்யான தகவலை கூறுகின்றனர். கரூர் தொகுதியில் புதிதாக, 6,000 பேர்தான், மனு கொடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 18 ஆயிரம் பேர் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 5,000 பேர்தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து கட்சி ஓட்டுச்சாவடி ஏஜன்ட்களையும் அழைத்து சென்று, இறந்தவர்களின் ஓட்டுகளை, எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீக்க வேண்டும். தி.மு.க., வினர் பொய்யான புகார் கூறி வருவதால், நாங்கள் கொடுக்கும் உண்மையான இறந்தவர்களின் பெயர்களை கூட, கலெக்டர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் நீக்க மறுக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE