நாமக்கல்: ''மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்ற கொள்கை அடிப்படையில், ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி, 234 தொகுதிகளிலும், பிரசாரம் செய்வேன்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
இதுகுறித்து, அவர், நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகளை அகற்றும் வகையில், ஆன்மிக அரசியலை முன்னெடுத்து, ரஜினி களம் இறங்கியுள்ளார். அதற்காக, மாவட்ட வாரியாக சென்று மாநாடுகளை நடத்தி வருகிறோம். விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில், ஹிந்து மக்கள் கட்சியால், அடுத்தடுத்து ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது. ஆன்மிக அரசியல் என்பது, நேர்மையான, ஊழலற்ற, ஏழைகளுக்கு பாதுகாப்பான, ஒரு அரசியல் முறை. தமிழகத்தில், ரஜினியின் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளேன். மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பது எங்கள் கொள்கை. வேளாண் திட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராடி வருவதற்கு, காங்., மற்றும் கெஜ்ரிவாலின் தூண்டுதலே காரணம். எந்த மாநிலத்தில் சென்றும், தாங்கள் விளைவித்த பொருளை, விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்பதே, வேளாண் சட்டத்தின் முக்கிய குறிக்கோள். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE