புதுடில்லி: கடந்த 7 மாதங்களாக எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதல், இந்தியாவிற்கான சோதனை எனவும், அதை திறம்பட சமாளித்து, தேசிய பாதுகாப்பு சவாலை நாடு எதிர்கொள்ளும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எப்ஐசிசிஐ அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது: எல்லையில் நடந்த சம்பவங்கள், நமக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்னை இன்னும் எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் என கணித்து சொல்ல முடியாது. தீர்வு எளிதாக இருக்குமா இல்லையா என்பதையும் கூற முடியாது. எல்லையில் நடந்த சம்பவங்கள், சீனாவின் நலனுக்காக மட்டும் நடக்கவில்லை என நம்புகிறேன். இதனால், அந்நாடு குறித்து, இந்தியாவில் பொது மக்கள் எண்ணங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை, அந்நாடு மதித்து நடக்காததால், பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இரு நாட்டு உறவுக்காக ஏராளமான பணிகள் நடந்துள்ளன. தற்போது நடந்த சம்பவங்கள், அதற்கு உதவும் என நான் நினைக்கவில்லை. இரு நாடுகளும் கவனமுடன் உருவாக்கிய நல்லெண்ணம் பாதிக்கப்பட்டுள்ளது. நமக்கு சோதனை ஏற்பட்டுள்ளது என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். இந்த சோதனையை சமாளித்து மீண்டு எழுவோம் என நம்பிக்கையுடன் கூறுகிறேன். நமது தேசிய பாதுகாப்பு சவாலை நாம் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE