புதுடில்லி:காங்கிரஸ் தலைவராக சரத் பவார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி துாக்க துவங்கியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இதனால், ஐ.மு., கூட்டணி தலைவராக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியானது.இதற்கிடையே, 'காங்., தலைவராக, நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, சரத் பவாரையே, காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்க, சோனியா திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக சரத் பவார் பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:காங்கிரஸ் தலைமைக்கு துரோகம் செய்து, 1978 மற்றும் 1999களில், கட்சியை உடைத்தவர் பவார். 'இத்தாலியை சேர்ந்த சோனியாவை, பிரதமராக்குவதை ஏற்க முடியாது' என, பகிரங்கமாக தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினார்.தற்போது அவரை காங்கிரஸ் தலைவராக்குவது, கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், சிவசேனா பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:ராஜிவ் படுகொலைக்கு பின், காங்கிரசின் தலைமை பொறுப்பையும், பிரதமர் பதவியையும், சரத் பவார் ஏற்க, காங்கிரசில் பலரும் விரும்பினார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர் சிலர் சதி செய்து, சரத் பவாரை பிரதமராக விடாமல் தடுத்து, நரசிம்மராவை பிரதமராக்கினர். கடந்த, 1996 லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சரத் பவார் தலைமையில் காங்., ஆட்சியமைக்க, சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதை விரும்பாத மூத்த தலைவர்கள், தேவ கவுடாவை பிரதமராக்க ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறு, அதில் பிரபுல் படேல் எழுதியுள்ளார்.