புதுடில்லி :''விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதில், அரசு உறுதியாக உள்ளது. அந்த நோக்கத்தில் தான், புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு அவர்களுக்கு புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியின் எல்லையில், தொடர்ந்து, 17வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. 'வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் விரிவுபடுத்தப்படும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், டில்லியில் நேற்று நடந்த, 'பிக்கி' எனப்படும், தொழில் அமைப்புகள் கூட்டமைப்பின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதே, இந்த அரசின் முக்கிய நோக்கம். அதன்படியே, விவசாய துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், அதை நோக்கியே அமைந்துள்ளன.
அதிக முதலீடுகள்
புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிகப் பலன்கள் கிடைக்க உள்ளன. புதிய புதிய தொழில்நுட்பங்கள், அவர்களுக்கு கிடைக்கும்; அதிக முதலீடுகளும் கிடைக்கும். பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்கள் வாயிலாக, 'மண்டி' எனப்படும் கொள்முதல் நிலையங்களைத் தவிர, வெளி சந்தையிலும், தங்கள் பொருட்களை விற்கும் வாய்ப்பு, விவசாயிகளுக்கு கிடைத்து உள்ளது.
அதன் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். மண்டிகள் கட்டமைப்பை நவீனப்படுத்துவது, டிஜிட்டல் மயமாக்குவது போன்ற பயன்களும் கிடைக்கும்.அரசின் இந்த அனைத்து முயற்சிகளும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி, அவர்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்காகவே. விவசாயிகள் வளர்ச்சி அடைந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும்.விவசாய துறையில், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யாதது வருத்தம்அளிக்கிறது. குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகள் அமைப்பது மற்றும்உரங்கள் தயாரிப்பில், அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
உணவு பதப்படுத்துதல் துறையிலும் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களின் பங்களிப்பே அதிகம் உள்ளது. உதாரணமாக, நாட்டின், 'இன்டர்நெட்'சேவை, நகரங்களைவிட, கிராமங்களில் அதிகம் உள்ளது. சிறிய நகரங்களில், வேளாண் சார்ந்த துறைகளில், தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
'பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளது'
'பிக்கி' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:இந்த ஆண்டில், நாம் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.பொருளாதார பாதிப்புகளில் இருந்து, நாம் மிக வேகமாக மீண்டு வருகிறோம். அன்னிய முதலீடும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
'தேச விரோதிகள் போராட்ட களத்தில் ஊடுருவல்'
'பிக்கி' நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய வர்த்தகத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் பேசியதாவது: டில்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட களம் திசை மாறியுள்ளது. தற்போது, இடதுசாரி மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள் பெயரில் ஊடுருவியுள்ளனர்.தேசவிரோத செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் இருந்தே, இது விவசாயிகளின் போராட்டம் இல்லை என்பது உறுதியாகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதைஅடுத்து, அண்டை மாநிலங்களுடனான, டில்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில், கான்கிரீட் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஹரியானா விவசாயிகள், அங்குள்ள சுங்கச் சாவடி மையங்களில் குவிந்து, நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியை, நேற்று தடுத்து நிறுத்தினர்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சு நடத்த நிபந்தனை!
விவசாய சங்கப் பிரதிநிதிகள், நேற்று கூறியுள்ளதாவது:அரசுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால், முதலில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்தே பேசுவோம்.ஏற்கனவே அறிவித்தபடி, எங்கள் அடுத்தக்கட்ட போராட்டம் தொடரும். ராஜஸ்தானில் இருந்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள், டில்லி நோக்கி வருகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வர உள்ளனர். வரும், 14ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.