வாயை திறக்க முடியலை!
'இந்த காலத்தில்,அரசியலில் குப்பை கொட்டுவது சாதாரண விஷயமில்லை. 24 மணி நேரமும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது' என, விரக்தியுடன் கூறுகிறார், கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்துவதில், மாநில அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில், சட்டம் இயற்ற ஏற்பாடுகள் தயாராக உள்ளன.சித்தராமையா, இதை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். 'வயது முதிர்ந்த பசுக்களை பராமரிப்பது மிகவும் சிரமம். எதற்கும் உதவாத அந்த பசுக்களை வைத்து தீனி போடுவது, அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும். அதனால் தான், அவற்றை கசாப்பு கடைக்கு அனுப்புகின்றனர்' என்றார்.
'பசு வதை தடை சட்டத்தை, அரசு அமல்படுத்தினால், வயதான பசுக்களை, பா.ஜ., தலைவர்களின் வீடுகளில் விடுவதை தவிர, அவற்றின் உரிமையாளர்களுக்கு வேறு வழியில்லை' என்றும், கோபத்தை வெளிப்படுத்தினார், சித்தராமையா. கர்நாடக அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஈஸ்வரப்பா, இதற்கு சரியான பதிலடி கொடுத்தார். 'சித்தராமையா உள்ளிட்ட காங்., தலைவர்கள் பலரது, தாய், தந்தைக்கு கூடத் தான் வயதாகி விட்டது; அதற்காக, அவர்களை அடுத்தவர்கள் வீட்டில் விட்டு விடுவரா' என, போட்டு தாக்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சித்தராமையா, 'வாயை திறந்து, நாலு வார்த்தை பேசியது தப்பா' என, பொறுமுகிறார்.
பலிகடா!
'ஒரு பெண், அமைச்சராக இருப்பது, இந்த மாநிலத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் தான், என்னை குறிவைத்து தாக்குகின்றனர்' என, கண்ணீர் வடிக்கிறார், கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சரான சசிகலா ஜாலி. கர்நாடகாவில், எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் அமைச்சர் இவர் தான்; இதனால் சசிகலா, தலைகால் புரியாத சந்தோஷத்தில் திளைத்தார். எங்கு சென்றாலும், 'கர்நாடகாவின் ஒரே பெண் அமைச்சர் நான் தான்' என, பெருமிதத்துடன் கூறுவார். இப்போது அந்த பெருமைக்கு, அவரது சொந்த கட்சியினரே வேட்டு வைக்கத் துவங்கிஉள்ளனர். 'எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்படலாம்; சிலருக்கு பதவி பறிபோகலாம்' என, கடந்த சில மாதங்களாகவே பேச்சுஅடிபடுகிறது.
சசிகலா ஜாலிக்கு வேண்டாத சிலரோ, அவருக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை, அவ்வப்போது கசிய விடுகின்றனர். 'சசிகலா ஜாலியின் அமைச்சரவை செயல்பாடுகள் சரியில்லை. அதனால், அவருக்கு பதிலாக, பூர்ணிமா ஸ்ரீனிவாஸ் அமைச்சராக்கப்படவுள்ளார்' என, பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விவகாரம், சசிகலா ஜாலிக்கு, கடும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.'எங்கள் கட்சியில் உள்ள பெண், எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, அமைச்சர் பதவி மீது ஆசை வந்துள்ளது; அது தப்பில்லை. அதற்காக, எங்கள் தலைவியை பலிகடாவாக்குவதை ஏற்க முடியாது' என, குமுறுகின்றனர், சசிகலா ஆதரவாளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE