'அப்படியே, போராட்டத்தை துாண்டி விடும் கட்சிகள் எவை என்பதையும், விவசாயிகளுக்கு சொல்லி வாருங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேச்சு: விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஆதரவானது என்பதை வலியுறுத்தி, விவசாயிகளுக்கு செய்துள்ள சாதனைகளை விளக்கி, 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற பெயரில், கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
'ஏற்கனவே, டில்லி கொதிக்கிறது; இங்கேயும் கொளுத்தி போடுகிறீர்களா...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டதால், போராட்டம் நீடிக்கும். அதே நேரத்தில் இது போன்ற சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி உள்ளனர். மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற்றாலும், தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும்
'போராட்டம் வெற்றி பெற்றால், இந்த நாட்டில், முதலில் மகிழ்ச்சி அடையும் கட்சி, உங்கள் கட்சி தானே...' என, சாடத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த, நாடு தழுவிய அமைதியான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, நல்ல விவசாயி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அவர் மத்திய அரசின் சட்டங்களுக்கு, ஆதரவு கொடுப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
.
'காழ்ப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு ஏன் சிறை தண்டனை கிடைத்தது...' என, கொக்கி போடும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா மீது, காங்., ஆட்சி காலத்தில் தான் புகார் தொடுக்கப்பட்டு, அதில் அவர் சிறைக்கு சென்றார் என்பதை ராஜா நினைவில் கொள்ள வேண்டும்.
'பல நல்ல அம்சங்கள் இருப்பதால் தான், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான, 'சிபா'வின் தேசிய தலைவர் விருத்தகிரி பேட்டி: விவசாய சட்டங்களில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயிக்காது; விவசாயிகளே நிர்ணயிப்பர். வரியில்லாமல், இந்தியா முழுதும், நெல், கோதுமை, காய்கறி, பழங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். அது, இந்த சட்டத்தில் ஏற்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சம். இந்த புதிய சட்டத்தால், கமிஷன் மண்டிகளின் சாம்ராஜ்யம் அழியும்.
'அவர் கட்சி ஆரம்பிப்பதில், யாருக்கும் அதிர்ச்சி ஏற்படாது எனில், கண்டுகொள்ளாமல் இருக்கலாமே... ஆளாளுக்கு எதுக்கு, 'கமென்ட்' குடுக்கிறீங்க...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் லியோனி பேட்டி: கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என, நடிகர் ரஜினி, இன்று, நேற்றா அறிவிக்கிறார். பல ஆண்டுகளாக இப்படித் தான் கூறி வருகிறார். பின், தன் வேலையை பார்க்க போய் விடுவார். அவர் கட்சி ஆரம்பித்தால், தி.மு.க., உட்பட எந்த கட்சிக்கும் அதிர்ச்சி ஏற்படாது.
'ஒரு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கூட நீங்கள் எழுதி இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு இருக்கும் அக்கறை, தமிழகத்தில் வேறு யாருக்கும் இல்லையே...' என, 'கவலை' தெரிவிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: தமிழ்வழி பயின்ற மாணவருக்கு அரசு வேலைவாய்ப்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது, கருணாநிதியின், 2010 ஆணை. அதை நீர்த்துப்போக செய்த, அ.தி.மு.க., அரசு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு வட மாநிலத்தோர் விண்ணப்பிக்கலாம் என்று விதிகளை திருத்தி, தமிழக இளைஞர்களுக்கு பச்சை துரோகம் செய்தனர்.
'கிழட்டு மாடுகள் பற்றி ரொம்ப கவலைப்படாதீர்கள்; கர்நாடகா பார்த்துக் கொள்ளும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: பசு, காளை, எருமைகளை கொன்றால், ஏழு ஆண்டு வரை சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் என, கர்நாடக பா.ஜ., அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. கிழட்டு மாடுகளை கசாப்பிற்கு விற்க முடியாது என்றால், விவசாயிகளின் நிலை என்னவாகும்?
'அடிக்கல் தானே நாட்டப்பட்டுள்ளது; கட்டி முடிக்கட்டும். அதன் பின், பெயர் சூட்டலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: டில்லியில் புதிதாக கட்டப்படும் பார்லிமென்ட் கட்டடங்களுக்கு, சட்டமேதை அம்பேத்கார் பெயரை, மத்திய அரசு சூட்ட வேண்டும். அவர் தான், நம் நாட்டின் ஜனநாயகத்தை வடிவமைத்தவர்.
'பழைய கதையை கிண்டாதீங்க; அப்போதைய நிலை வேறு, இப்போதைய நிலை வேறு. இப்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என துடிப்பதால், இதெல்லாம் நடக்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா அறிக்கை: தமிழகம் முழுதும், 1971ல் விவசாயிகள், யூனிட்டுக்கு, 1 பைசா குறைக்கச் சொல்லி, தி.மு.க., ஆட்சியின் போது போராடினர். அவர்கள் மீது தி.மு.க., அரசு கொலைவெறி தாக்குதல் நடத்தியது. ஆனால் இன்று, விவசாயிகளுக்கு ஆதரவாக, 'பந்த்' நடத்துமாம். தமிழக விவசாயிகள் போலிகளை கண்டு ஏமாற மாட்டார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE