கடவுள் பக்தி, தேச பக்தியை மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும், சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும், சினிமாவின் பங்கு மிக அதிகம். ஆனால், கடவுளையும், மதத்தையும், ஏளனம் செய்து, ஒரு சிலர் அரசியல் செய்வது போல், அவ்வப்போது சில சினிமாக்களும் மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறி வருகின்றன.
சமீபத்தில் வெளியான, அம்மன் பெயரிலான ஒரு படத்தில், ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை, கடவுள் வழிபாட்டை, குறிப்பாக நம் வழிபாட்டு முறையை கிண்டல் செய்துள்ளனர்; இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்ற இறை வழிபாட்டு நம்பிக்கையை கண்டித்துள்ளனர்.
நடுநிலை
ஹிந்து மதக் கடவுளை தன் விரோதி போலவும், மாற்று மதக் கடவுளை நட்பாகவும், அந்த படத்தின் அம்மன் சொல்வதாக, அந்த படத்தில் காட்சிகள் உள்ளன.பொங்கலுக்கும், பஞ்சாமிர்தத்துக்கும் தான் மக்கள் கோவிலுக்கு செல்கின்றனர் என்பது போல, அற்பத்தனமான சிந்தனை, படம் முழுவதும் பிரதிபலிக்கும்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு, கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம்.
ஆனால், பொதுவெளியில், சினிமா போன்ற ஊடகங்களில் ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அதில் உண்மையும், நேர்மையும், நடுநிலைமையும் இருக்க வேண்டியது அவசியம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மத, இறை நம்பிக்கைகளை கேலி செய்து, உணர்வுகளை காயப்படுத்துவது எப்படி நியாயமாகும்?அதுவும், பிற மதங்கள் சம்பந்தப்பட்ட ஒரு சில காட்சிகளை, அந்த மதத்தினரின் மனம் புண்படக் கூடாது என்று நீக்கிவிட்டு, படம் முழுவதும் ஹிந்து மதத்தினரை மட்டும் தாக்கி இருப்பது, அந்தப் படத் தயாரிப்பாளர்களின் போலி முகத்தையும், பட இயக்குனரின் உள்நோக்கத்தையும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் சில பல இடங்களில் நடக்கும் அநியாயங்களை, மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டி, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் அந்தப் படத்தின் நோக்கம் என்றால், எல்லா மதங்களில் நடக்கும் அத்துமீறல்களை காட்டி இருக்க வேண்டும்.அதற்கு தைரியம் இன்றி, ஹிந்து மதத்தில், ஹிந்துக்களை மட்டும், அந்த படத்தின் இயக்குனர் வஞ்சித்துள்ளார். எத்தனையோ போலி சீர்திருத்தவாதிகள், கால வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். அந்த வகையில், இந்த படமும், அதன் இயக்குனரும் காணாமல் போவார். எனினும், உள்நோக்கத்துடன் படங்களை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்பதே என் எண்ணம்.
'நாத்திகவாதம் என்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர, முழு மனதின் உண்மையான உணர்ச்சி அல்ல. சுத்தமான சோம்பேறிகள் எப்படி சம்பாதிப்பது என யோசித்து முடிவு செய்து தொடங்கிய இயக்கமே நாத்திகவாதம்' என்றார், கடுமையாக நாத்திகம் பேசி, பின், 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்ற அற்புதமான நுாலை படைத்த ஆத்திகரான கவிஞர் கண்ணதாசன்.
'கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகவே கந்தபுராணம், பெரியபுராணம், கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நுால்களைப் படிக்கத் துவங்கினேன். கம்பனைப் படிக்கபடிக்க, நான் கம்பனுக்கு அடிமையானேன்; புராணங்களில் உள்ள தத்துவங்களைப் படிக்கபடிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்' என்று, உண்மையை உரக்கச் சொன்னார் கண்ணதாசன்.
கடவுள் இல்லை என்ற பகுத்தறிவுப் பாசறையில் இருந்து வெளியேறிய அண்ணாதுரை கூட, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று தான் கூறினார். கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசிய எத்தனையோ பேர், ஹிந்து மதத்தின் உயர்ந்த கோட்பாடுகளாலும், ஆழ்ந்த தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டு, தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஏமாற்று வேலை
எனவே, இன்றைய இளைய சமுதாயம், ஆங்கிலக் கவிஞர்கள் ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும் தெரிந்துக் கொள்வதைப் போல், தமிழ் சித்தர் பட்டினத்தாரையும், உயர்ந்த ஞானி பரமஹம்சரையும் அறிந்து கொள்வதும் அவசியம்.ஏனெனில், அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து, ஒவ்வொரு தனி மனிதனையும் செம்மைப் படுத்துவதே அவர்களைப் போன்ற அவதார புருஷர்களின் நோக்கம்.
விதிவிலக்காக எங்கோ சில போலி சாமியார்கள், ஏமாற்று வேலைகள் செய்து கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்காக மக்களின் அடிப்படை மத நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்கி, பணம் சம்பாதிப்பது ஏற்கத்தக்கதல்ல.வழிபடு முறைகள் என்பது, தனிநபர் விருப்பம் சார்ந்த விஷயம். மண் சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது, தீ மிதிப்பது போன்ற கடினமான வேண்டுதல்கள், கடவுளுக்கு நன்றி பாராட்டுபவை. அதுபோலவே மரங்கள், மலைகள், ஆறுகள் எல்லாவற்றையும் கடவுளாக வழிபடுவது இயற்கையைப் பாதுகாக்கும் யுக்தி. இவையெல்லாம் மூடநம்பிக்கை என்றால், 'கடவுளே இல்லை' என்று சொல்பவர்களுக்கு, அதை விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை.
நாத்திகம் பேசுபவர்களால் தான் ஆறுகள், மணல் கொள்ளையால் மலடாகிக் கிடக்கின்றன. கடவுளையும், மதத்தையும் சார்ந்து இருக்கச் சொல்லி, ஹிந்து மதம் யாரையும் வற்புறுத்தவில்லை. இறை பக்தியும், நம்பிக்கையும் மட்டுமே எதற்கும் முழு தீர்வாகாது. கூடவே இடைவிடாத முயற்சியும், அளவற்ற சகிப்புத்தன்மையும், கடினமான உழைப்பும் வேண்டும். கடவுள் நம்பிக்கை, நமக்கு பயம் போக்கி, பாதுகாப்பு உணர்வைத் தரும். 'இதுவும் கடந்து போகும்' என்ற ஆறுதலை தரும். 'எல்லாம் ஆண்டவன் செயல்; நடப்பது நடக்கட்டும்' என்று துன்பத்தை பொறுத்துக் கொள்ளும் சக்தியைக் கொடுக்கும்; அவற்றை எதிர்கொண்டு வெல்லும் தைரியத்தைக் கொடுக்கும்.
மரணம், நோய் போன்றவற்றை நம்மால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், கடவுள் நம்பிக்கை நமக்கு கற்றுக் கொடுக்கும். எனவே, மத நம்பிக்கை என்பது, அனைவருக்கும் அவசியம் வேண்டும். மனிதன் மனிதனாக வாழ, மிருகம் ஆகாமலிருக்க, 'கடவுள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்' என்ற எண்ணம் வந்தாலே போதும். காட்டாற்று வெள்ளமாய் அலை பாயும் மனதை அடக்கும் இரு கரைகளாக, மதமும், கடவுள் நம்பிக்கையும் இருக்கும்; அது நம்மை காக்கும். தனிமனித ஒழுக்கத்திற்கும், சமுதாய நலனுக்கும் மதம் சார்ந்த கடவுள் மீதான பக்தி யும், பயமும் அவசியம்.
மது, போதைப் பொருட்கள், தவறான சில சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால், பல மனிதர்களின் மனமும், மூளையும் மழுங்கிப் போய் கிடக்கிறது. கேவலமான கொடூரமான எண்ணங்கள் தலை துாக்காமல் தடுக்க, பக்தி மார்க்கம் உதவும்.கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பாவம் செய்ய அஞ்சுவர். நம் தவறான நடவடிக்கைகளைக் கண்காணித்து தண்டிக்க, காவல் துறையும், சட்டமும் இருப்பது போல, மனத் துாய்மைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும், கடவுள் நம்பிக்கை அவசியமாகிறது.
எனவே, நாம் எல்லாரும் அவரவர் மத வழிபாடுகளை முழு நம்பிக்கையுடன் செய்து பலன் அடைவோம். போலி நாத்திக, சீர்திருத்தவாதிகளையும், போலி மதசார்பின்மையாளர்களையும் புறந்தள்ளுவோம்.ஏனெனில், சினிமா என்ற ஊடகம் மூலம் மக்களைக் குழப்பி, மூளைச்சலவை செய்ய சிலர் முயன்று வருகின்றனர். நம் தெய்வபக்தி பாடல்களின் ராகங்களை குத்துப் பாடல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இது, அவர்களின் இசை வறட்சியா அல்லது அதிலும் உள்நோக்கம் இருக்கிறதா தெரியவில்லை.
மேலும், ஹிந்து தெய்வ வடிவங்களின் வேடமிட்டு, தகாத செயல்கள் செய்வது போல் காட்டுகின்றனர். குறிப்பாக, பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ருத்ராட்சமும், நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு குற்றங்கள் செய்வது போல் காட்சிகள் இருக்கும்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஒரு படத்தில் மேற்சொன்ன மதக் குறியீடுகளுடன் உள்ள வில்லன், 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கழுத்திலுள்ள ருத்ராட்சத்தை பிடித்தபடி சொல்லி, 'அவனை தீர்த்து விடு' என்று சொல்வான். ஆனால், மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர், கதாநாயகனைக் காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார்.சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு தமிழ் படத்தின் காட்சியில், பேருந்தில் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் இட்ட ஒருவர் பயணம் செய்வார். ஒரு கிறிஸ்துவ பாதிரியார் எதிரே வந்தவுடன், இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்வர். காட்சி இத்துடன் முடிந்தால் அது ஆரோக்கியமான மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் என்று கொள்ளலாம். ஆனால், அந்தப் பாதிரியார், நிறைய விபூதியும் குங்குமமும் அணிந்தவரின் நெற்றியின் மீது சிலுவை குறியிட்டு ஆசீர்வதித்து அமர்வார்.
வெறும் நெற்றியாக காட்டி இருந்தால் கூட இந்த உறுத்தல் ஏற்பட்டு இருக்காது. ஏன் இந்தத் தேவையற்ற காட்சி... இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்... இதுவே அந்த பாதிரியாருக்கு விபூதி குங்குமம் பூசி விடுவது போல காட்சி அமைக்கும் தைரியம் இருக்கிறதா; அப்படியே இருந்தாலும், அது எவ்வளவு விமர்சனங்களை, கண்டன ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டிருக்கும்...
ஆனால், முன் சொன்ன காட்சிக்காக எந்தக் கண்டனமும், மறுப்பும் எழுந்ததாக நினைவில்லை. இதுபோல் பல காட்சிகள், பல திரைப்படங்கள் என்று உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம். உணர்வுகளைக் காயப்படுத்தாமல், மதசார்பின்மை என்று போலியாக இல்லாமல், எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த நோக்கத்துடனோ அல்லது அவரவர் மதம் அவரவர்க்கு உயர்ந்தது என்ற யதார்த்தத்துடன் நேர்மையாக வாழப் பழகுவோம். அடுத்தவர் மத வழிபாட்டிலும், நம்பிக்கை சுதந்திரத்திலும் அனாவசியமாக குறுக்கிட்டு, நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைக்கும் திரைமறைவு வேலைகள் நிறுத்தப்பட வேண்டும்.
மதச் சின்னங்களை வெளிப்படையாக அணிந்தபடி, கொடும் குற்றங்கள் இழைப்பது போல் காட்டப்படும் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும்.'வேற்றுமையில் ஒற்றுமை என்ற இயற்கை நியதியின் படி ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கி, தன் தனித்தன்மையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
வாழ்க்கையின் கசப்பான கஷ்ட காலங்கள், நம்மை நல்வழிப்படுத்தவே என்பர் ஞானியர். பகவத்கீதை, மனுஸ்மிருதி, பைபிள், குரான் போன்ற புனித நுால்களின் உயர்ந்த தத்துவங்கள் போதிக்கும் வாழ்க்கை நெறிமுறைகள் வேண்டுமானால் நமக்குப் புரியாமல் இருக்கலாம்.
ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி மனிதகுலம் முழுவதையும், அதன் அகங்காரத்தை அடக்கி ஒடுக்கி, ஆறு மாத காலம் வீட்டுக்குள் முடக்கி போட்டு போதித்த பாடத்தை எவரேனும் மறக்க முடியுமா?இன்னுமா அடுத்தவரை அடக்கியாளும் அதிகார மனப்போக்கு... அதைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான சமுதாய முன்னேற்றத்துக்கு கைகொடுப்போம். அவரவர் பாதையில் அழகாகப் பயணிப்போம்!
அபிராமி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: ikshu1000@yahoo.co.in