புதுடில்லி:'டிஜிட்டல்' முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, வாக்காளர்கள் ஓட்டு போடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அடையாள அட்டையை வைத்து ஓட்டு போடும் முறை, 1993ல், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த, டி.என்.சேஷனால் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிலையில், அந்த முறையை மாற்றி, டிஜிட்டல் முறையில், வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு, டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. எனினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.களத்தில் உள்ள அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து, பல பரிந்துரைகள் வந்துள்ளன. அதில், இந்த டிஜிட்டல் அடையாள அட்டையும் ஒன்று.அடையாள அட்டையை அச்சிட்டு, அதை வாக்காளர்களிடம் சேர்ப்பதற்கு, அதிக கால நேரம் ஆகிறது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டை, வாக்காளர்களுக்கு உடனடி யாக கிடைத்துவிடும். மேலும், டிஜிட்டல் அடையாள அட்டையில், வாக்காளரின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்கும்.டிஜிட்டல் அடையாள அட்டை, மொபைல் போன், இணையதளம், மின்னஞ்சல் என, எதில் வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம். தேர்தல் ஆணையம், இதில் இறுதி முடிவு எடுத்த பின், இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE