த்தாண்டில், அரசியல் அவதாரம் எடுக்கும் ரஜினி, முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இந்நாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் துணையுடன் களமிறங்கவும், முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றி பெறவும், சக்ர வியூகம் வகுத்து வருகிறார். அதற்கு ஆதரவாக, கவர்ச்சி நடிகையர், இளம் நடிகர்கள் என, பலரும் வரிசை கட்டி நிற்பதால், 'ரணகள' துவக்கத்திற்கு, அவர் தயாராகிறார்.
'தமிழகத்தில் அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்; இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை' என்ற, 'பஞ்ச்' வசனத்தோடு, நடிகர் ரஜினி, அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். அடுத்த மாதம், புதிதாக கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில், அரசியல் அதிசயத்தை நிகழ்த்த முடிவு செய்துள்ள ரஜினி, நேற்று தன், 71வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என, அனைத்து தரப்பினரும், வாழ்த்து தெரிவித்தனர்.நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் என, திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர், அவருக்கு சமூக வலைதளங்களில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மாநிலம் முழுதும் உள்ள ரசிகர்கள், அவரது பிறந்த நாளை, பல விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் ரஜினிக்கு, இது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது.
அறிவிப்பு வெளியிட, 18 நாட்களே உள்ளதால், கட்சி கட்டமைப்பு, கொள்கை, கொடி வடிவமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் புத்தாண்டில், தன் கட்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களை, மக்கள் மத்தியில், ரஜினி அறிவிக்க உள்ளார்.
இதற்கு, பல்வேறு பிரதமர்கள் மற்றும் மாநில முதல்வர்களிடம் பணிபுரிந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உதவி வருகின்றனர். அத்துடன், மற்ற கட்சிகளை வீழ்த்தி, களத்தில் வெற்றி பெறுவதற்கான, 'சக்ர வியூகம்' அமைக்கும் பணியிலும், ரஜினிக்கு கை கொடுக்கும் அரசியல் ஆசான்களும், அதிகார வர்க்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
* மிக முக்கியமாக, டில்லியில் உள்ள, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஒருவர், கட்சியின் கொள்கை திட்டங்களை வகுப்பதில், பல்வேறு ஆலோசனை வழங்கி உள்ளார்.
* தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய மிக முக்கிய செயலர் ஒருவரும், கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என, ரஜினிக்கு வழிகாட்டி உள்ளார்.
* தமிழகத்தில் பொதுப்பணி, நீர்வள ஆதாரம், வருவாய், வணிக வரி, நிதி, உள்துறை போன்றவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகள், தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்டு, ரஜினியிடம் வழங்கி உள்ளனர்.
* ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்ததும், அவர் பின்னால் அணிவகுக்க, கவர்ச்சி நடிகையர், இளம் நடிகர்கள், வில்லன் நடிகர்கள், குணசித்திர நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் என, ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.அவர்களில் யாரை எல்லாம் கட்சியில் சேர்ப்பது; யாருக்கு என்ன பதவி வழங்குவது என்றும், ஆலோசனை நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர், ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்க உள்ள தகவல், மற்ற கட்சிகளின் வட்டாரத்தில், சூட்டை கிளப்பி உள்ளது.
* கட்சியின் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, காங்கிரசிலிருந்து வௌியேற்றப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கீழ், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரசாரம் செய்யும் யுக்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
* கட்சி துவக்கிய பின், பிப்ரவரி மாதம், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், 50 லட்சம் பேருடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்கவும் திட்டமிட்டுள்ளார்.
* கட்சியில் யாருக்கும், எந்த மனத் தாங்கலும் இருக்கக் கூடாது என்பதிலும், ரஜினி உறுதியாக உள்ளார். ஆட்சி என வந்துவிட்டால், கட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களை, அரசு அதிகாரிகளை, அரசு இயந்திரத்தை, தொழிலதிபர்களை, திரைப்படத் துறையினரை வாட்டி வதைக்கக் கூடாது என்று, கடும் உத்தரவு போட்டுள்ளார்.
* ரஜினிக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள, தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை, மற்ற கட்சிகள் அறிவிக்காத திட்டங்கள், கொள்கைகளுடனும்; நட்சத்திர கூட்டம், ரசிகர் பட்டாளத்துடனும், ரணகள துவக்கத்திற்கு, ரஜினி தயாராகி வருகிறார்.
ரஜினியின் முக்கிய கொள்கைகள்
* ஊழல் இல்லாத ஆட்சி.
* வெளிப்படையான நிர்வாகம்.
* அனைத்து துறைகளையும், 'டிஜிட்டல்' மயமாக்குதல்.
* ஆட்டோக்காரர்கள் நலனில் அக்கறை.
* சேவைகளை துரிதமாக்குதல்.
* 'ரெட் டேப்' முறையை முற்றிலும் நீக்குதல்.
* கோவில் மற்றும் வழிபாட்டுத் தல ஆக்கிரமிப்பு/ அபகரிப்பாளர்களைக் கண்டறிந்து, கோவில்களை மீட்டல்.
* இந்து சமய அறநிலையத் துறையை மாற்றி அமைத்தல் அல்லது முற்றிலுமாக நீக்குதல்.
* நதிநீர் இணைப்பு, நீர் நிலை பராமரிப்பு, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்.
கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி எழுதுங்கள் வாசகர்களே!
தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை மதிக்கும் கட்சிகள், வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பல்துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பாதியளவு நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தாலே, மக்களின் வாழ்வு வளமாகியிருக்கும்; அவ்வாறு நிகழாதது வாக்காளர்களின் துரதிருஷ்டமே.வரும் தேர்தலிலாவது, மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை, அரசியல் கட்சிகள் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
அதற்கு பாலமாக இருக்கும் வகையில், மக்களின் தேவைகளை அவர்களிடமே கேட்டுப் பெற்று, அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், அவை, 'தினமலர்' நாளிதழில் பிரசுரிக்கப்படும்.
மக்கள் பயன் பெறுவதற்கான திட்டங்கள், யோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்த கருத்துக்களை, கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், அறிஞர்கள் என, அனைத்து தரப்பினரும் சுருக்கமாக, தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதி அனுப்பலாம்!தலைப்பு மற்றும் முகவரி
தபால்: 'இதுதானுங்க வேணும்!' - தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14.
இ-மெயில் முகவரி: dmrcni@dinamalar.in 'சப்ஜெக்ட்' பகுதியில் 'இதுதானுங்க வேணும்' அல்லது This is what we want என குறிப்பிடலாம்.
டெலிகிராமில் அனுப்ப : 98940 09238.
- நமது டில்லி நிருபர் -