புதுடில்லி:மேற்கு வங்கத்தில், நட்டாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, மத்திய அரசு பணிக்கு மாற்றி, மத்திய உள்துறை அமைச்சகம், உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தின் தெற்கு, 24 பர்கானாஸ் மாவட்டத்தில், சமீபத்தில், பா.ஜ., கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க செல்லும் வழியில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் கார் மீது, திரிணமுல் காங்., தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவரின் கார் சேதமடைந்தது. இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விளக்கம் அளிக்க, மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.,க்கும், மத்திய உள்துறை அமைச்சகம், ஆஜராக 'சம்மன்' அனுப்பியது.
இந்நிலையில், நட்டா பயணத்தின்போது உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, மேற்கு வங்க மாநில ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மூன்று பேரை, மத்திய அரசு பணிக்கு மாற்றி, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி, எஸ்.பி., போலாநாத் பாண்டே, டி.ஐ.ஜி., பிரவீன் திரிபாதி மற்றும் ஏ.டி.ஜி., ராஜீவ் மிஷ்ரா உள்ளிட்ட மூன்று பேருக்கு, நேற்று, 'சம்மன்' அனுப்பி வைக்கப்பட்டது.மாநிலத்தில் பணிபுரியும் அதிகாரியை, மத்திய அரசு பணியடத்திற்கு மாற்ற, மாநில அரசின் அனுமதி பெறப்படும். ஆனால், இந்த முறை, மேற்கு வங்க அரசின் ஒப்புதல் இன்றி, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும், மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
திரிணமுல் காங்., - எம்.பி., கல்யாண் பானர்ஜி, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லாவிற்கு, நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், 'சட்டம் ஒழுங்கு நிலை, மாநிலபட்டியலுக்குள் வரும். அப்படி இருக்க, அதை வைத்து, மாநில தலைமைச் செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.,க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது ஏன்? இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என, குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE