கோவை;கோவை, அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, ரூ.1,620 கோடியில், மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) துவக்கியுள்ளது.முதல்கட்டமாக, பி.எஸ்.ஜி., அரசு கலை கல்லுாரி முதல் ஜென்னீஸ் கிளப் ஓட்டல் முன் வரை, துாண் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இதற்காக, மையத்தடுப்புக்கு இடையே இருந்த, மின் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன.இப்பாலத்தில் பயணிக்க, இரு வழித்தடத்திலும் தலா இரு ஏறு தளம், இரு இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அகலப் படுத்தப்படுகிறது. மூன்று இடங்களில் புதுப்பிக்கப்படுகிறது. ஐந்து இடங்களில், சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக, 8 வார்டுகளில், நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. சுமார், 500 நில உரிமையாளர்களிடம் இருந்து, 24 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை உத்தேசித்துள்ளது.முதல்கட்டமாக, 27 மற்றும், 28வது வார்டுகளில், 92 நில உரிமையாளர்களிடம் இருந்து, 11,403 சதுர மீட்டர் இடத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை இருப்பின், 30 நாட்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விசாரிக்கப்படும்.ஆட்சேபனை தெரிவித்தவர்கள் அல்லது வக்கீல்கள் ஆஜராகி, சாட்சியம் சொல்லலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக, மீதமுள்ள, 6 வார்டுகளில் கையகப்படுத்த உள்ள இடங்கள் குறித்து, அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.ம.தி.மு.க., புகாருக்கு பதில்இச்சூழலில், 'மரக்கன்று நடுவதற்கு ஒதுக்கிய இடத்தில், கான்கிரீட் கலவை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அவற்றை வேறிடத்துக்கு மாற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்' என, ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அவிநாசி ரோட்டில், லீ மெரிடியன் ஓட்டலுக்கு எதிரே, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக, 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 3 ஏக்கர் பரப்பில், 8,000 மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து வருகிறோம்; கோர்ட்டிலும் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம்.மீதமுள்ள இடத்தில், 1.5 ஏக்கர் நிலத்தை, குத்தகை அடிப்படையில், இரு ஆண்டுகளுக்கு, 40 லட்சம் ரூபாய் வாடகைக்கு, கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறோம். மரக்கன்றுகள் நட்டுள்ள பகுதியை, எவ்விதத்திலும் சேதப்படுத்தவில்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE