ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மலையை சுற்றி, மூலிகை காற்றை சுவாசித்தபடி இயற்கை சூழலில் கிரிவலம் செல்ல பாதை அமைக்கும் பணி முடிவுற்றது.
ஒட்டன்சத்திரம் அருகே பழநி ரோட்டில் குழந்தைவேலப்பர் கோயில் உள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி விழுதுகள் அமைப்பு கிரிவலப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.சில மாதங்களுக்கு முன்பு சர்வேயர்கள் மலையை சுற்றி அளவீட்டுப் பணிகளை முடித்து, தாசில்தார் சுப்பையா தலைமையில் பூமிபூஜை போடப்பட்டது. 3.5 கி.மீ., துார பாதையில் பாறைகள், புதர்கள் அகற்றப்பட்டன.சில இடங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளை சிலர் தாங்களாகவே அகற்றினர். ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ராமர் மற்றும் வருவாய்துறையினர் மேற்பார்வையில் தீவிரமாக பணிகள் நடந்தன.
இதில் 2 சிறிய நீர்த்தேக்க குட்டை, ஒரு கசிவு நீர் குட்டை மலையின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய மழையால் இவை நிரம்பி உள்ளன. தென்மேற்கு பகுதியில், கசிவு நீர் குட்டை, நீர்வழியத் தடங்களை சீரமைத்து, பறவைகள், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இணை ஒருங்கிணைப்பாளர் ராமர் கூறியதாவது: இப்பகுதி பக்தர்களுக்கு கிரிவலப்பாதையாகவும், பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி தளமாகவும், பறவை இனங்களுக்கு புகலிடமாகவும் விளங்கும். மலையைச் சுற்றிலும் 20 ஆயிரம் விதைப் பந்துகள் துாவப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரம் விதைகளை துாவ திட்டமிட்டுள்ளோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE