சென்னை:தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடி களிலும், நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், ஆர்வமுடன் சென்று, பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில், நான்கு மாதங்களில், சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16 முதல் நடந்து வருகிறது; வரும், 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.
சரி பார்க்க உதவினர்
வாக்காளர்கள் வசதிக்காக, நேற்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இன்றும் முகாம் நடக்க உள்ளது. நேற்றைய முகாமில், அரசியல் கட்சி முகவர்கள், ஓட்டுச்சாவடியில் அமர்ந்து, அங்கு வந்தவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என, சரி பார்க்க உதவினர்.
குழப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்தனர். அதேபோல, பெயர் நீக்கவும், திருத்தம் செய்யவும், முகவரி மாற்றவும், ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.வாக்காளர் பட்டியலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயர், வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றிருந்ததால், பலருக்கு குழப்பம் ஏற்பட்டது.
கணவன் பெயர் வரிசை எண், 316ல் இடம் பெற்றிருக்க, மனைவி பெயர், வரிசை எண், 845ல் இடம் பெற்றிருந்தது. இதேபோல, ஒரே குடும்பத்தில் பலருடைய பெயர், வரிசையாக இல்லாமல், வெவ்வேறு வரிசை எண்களில் இடம் பெற்றிருப்பதால், அவர்கள் தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை பார்க்க, மிகவும் சிரமப்பட்டனர்.
தேர்தல் கமிஷன் இணையதளத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரி பார்க்கும் வசதி உள்ளது.அதில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு உள்ளது என்ற விபரம் வந்து விடும். பாகம் எண், வரிசை எண் என, அனைத்து விபரங்களையும் காணலாம். வாக்காளர் பட்டியலில், பெயர் உள்ளதா என்று பார்ப்போர், தங்கள் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டால், தேர்தலின் போது ஓட்டளிக்க எளிதாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE