திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மேற்பார்வையாளர் மணிகண்டன் 48, கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பழக்கத்தால் கொலை நடந்துள்ளது.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 48, திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக இருந்தார். டிச.4ல் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. டிச.8 காலை ஆர்.எம்., காலனி சாலையில் மின்மயானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக மணிகண்டன் உடல் மீட்கப்பட்டது.
2 பேர் கைது
டி.எஸ்.பி., மணிமாறன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் வீரபாண்டி, நல்லதம்பி, குமார், போலீசார் ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் தனிப்படையினர் விசாரித்து 2 பேரை கைது செய்தனர்.
போலீஸ் கூறுகையில், ''டிச.6ல் திண்டுக்கல்லில் பழநி ரோட்டில் மணிகண்டன் போதையில் நடந்து சென்றார். டூவீலரில் வந்த இருவர் ஆர்.எம்.காலனி மின்மயானம் அருகே அழைத்து சென்று அவருடன் சேர்ந்து மதுகுடித்தனர். அவரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்பின் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தை வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்த இருவரும் மணிகண்டனை கட்டிப்போட்டு பிளேடால் உடலை கிழித்ததோடு துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். முன்பகை இருப்பதாக தெரியவில்லை.
இதுதொடர்பாக மீனாட்சிநாயக்கன்பட்டி கோச்சாபாய் என்ற சிவக்குமார் 21, பாலதிருப்பதி
16 வயது சிறுவன் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள். சிவக்குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகளும் உள்ளன. கொலைக்கு பயன்படுத்திய டூவீலர் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது'' என்றனர்.
துப்பு துலக்கியது எப்படி
தனிப்படை போலீசார் நகர் முழுவதும் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஒரு கேமராவில் பழநி ரோட்டில் நடந்து சென்ற மணிகண்டனிடம் இருவர் பேசி டூவீலரில் ஏற்றி செல்வது பதிவாகியிருந்தது. அவர்கள் முகம், வாகனஎண் தெளிவாக தெரியவில்லை. போலீசார் நகரில் உள்ள பழைய குற்றவாளிகள் பட்டியலை ஆய்வு செய்து சில தடயங்கள் அடிப்படையில் சிவக்குமாரிடம் விசாரித்தபோது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த 5 நாட்களில் இருவரை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி.,ரவளிப்பிரியா பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE