சென்னை:'டிவி' நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில் அவரது கணவரிடம் நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் புதிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.இதுகுறித்து போலீஸ் வட்டாரம் கூறியதாவது:
சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும் திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.மேலும் அவர்களின் திருமணத்திற்கு சித்ராவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் காரணமாகவே அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த சித்ரா ஹேம்நாத்தை வெளியே அனுப்பி விட்டு 'மேக்கப்' கலைத்து குளித்துள்ளார். பின் தாயாருடன் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.தாயாருடன் பேசும் போது ஏற்பட்ட மன உளைச்சல்; கணவரை பிரிய முடியாமலும் தாயின் பேச்சை தட்ட மனமில்லாமலும் ஏற்பட்ட விரக்தி காரணமாக சித்ரா தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரது தாயாரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE