மதுரை:கொரோனா தொற்று பெருந்துயரில் பணப்புழக்கம் பழைய நிலைக்கு திரும்பாத நிலையில் கட்டாயப்படுத்தி கொடிநாள் வசூலில் அரசு அலுவலகங்கள் ஈடுபடுவதும், அதற்கு உரிய ரசீதுகள் வழங்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம், போரில் உடல் உறுப்புகளை இழக்கும் ராணுவத்தினர் மறுவாழ்வுக்கு உதவிட ஒவ்வொரு ஆண்டும் டிச., 7 கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் கொடி நாள் நிதி வசூலிக்கப் படுகிறது.
முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகம் கொடிகளை வழங்குகிறது. கொடியை விற்று திரட்டப்படும் நிதியை அரசு துறையினர் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்படைப்பர்.
வசூலில் முறைகேடு
இதை பயன்படுத்தி போக்குவரத்து, வருவாய், கல்வித்துறைகளில் அடாவடியாக வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் பள்ளிகள் கொடிநாள் நிதி ரூ.4500 வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடையுத்தரவால் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலாகாத நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் கொடிநாள் நிதியாக ரூ.4500 வசூலிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் தற்காலிக, நிரந்தர பழகுனர் உரிமம் பெற ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை வழங்கினால் தான் உரிமம் கிடைக்கும். வருவாய் அலுவலகங்களில் பல்வேறு சான்றுகள் பெற கொடிநாள் நிதி வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரூ.4500 உட்பட வசூலிக்கப்படும் எந்த தொகைக்கும் ரசீதோ, கொடிகளோ தரப்படுவதில்லை. வசூலில் முறைகேடு நடக்கிறது.
கட்டாய வசூல்
ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடிநாள் நிதி இவ்வளவு என வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதிகாரிகளும் வசூல் முறைகேட்டில் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதிற்கொண்டு அலுவலகங்களுக்கு வருவோர் தலையில் கட்டுகின்றனர். கொரோனா தொற்றால் மார்ச் முதல் தொழில்கள் இன்றி மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனவே இந்தாண்டு தொழில், கல்வி நிறுவனங்களிடம் கொடிநாள் நிதி வசூலிக்க கட்டாயப்படுத்த கூடாது. அப்படி வசூலித்திருந்தாலும் அதை திருப்பி வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE