திருப்பூர்;'வால்மார்ட் 'போன்ற சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து அதிக மதிப்பில் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டம் வகுத்துள்ளன.
கொரோனாவுக்கு பின், உலகளாவிய நாடுகள், சீனாவுடனான வர்த்தகத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அந்நாட்டுக்கு மாற்றாக, இந்தியா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து, பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாட்டு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'வால்மார்ட்' நிறுவனம், ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளி, உணவு பொருள் என அனைத்துவகை பொருட்களையும் விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், அடுத்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து தங்கள் நிறுவனம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மொத்த மதிப்பு, மூன்று மட ங்கு அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.'வால்மார்ட்' நிறுவனம் தற்போது, ஆண்டுக்கு, 22 ஆயிரத்து 116 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது, வரும் 2027ம் ஆண்டில், 73 ஆயிரத்து 721 கோடியாக அதிகரிக்கும் என, அந்நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனாவுக்கு பின், உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மாறிவரும் இந்த வர்த்தக சூழல், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாட்டு வர்த்தக நிறுவனங்கள், சீனா நீங்கலாக, பரவலாக பிற நாடுகளிலிருந்து, அதிக மதிப்பில் பொருட்களை இறக்குமதி செய்யத்துவங்கிவிட்டன.பிளிப்காட் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகள் 'வால்மார்ட்' வசம் உள்ளது.
இந்தியாவில், பிற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை எதிர்கொண்டு, பிளிப்காட்- ஐ வெற்றிகரமாக செயல்படச் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன.இந்திய அரசு, சுய சார்பு கொள்கையை அறிவித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த காரணங்களாலேயே, 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மதிப்பை, மூன்று மடங்கு அதிகரிக்க திட்டம் வகுத்துள்ளது.எனவே, வரும் காலங்களில், திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE