சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழக துணைவேந்தர் அறை முன் பணி நிரவல் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை அரசு கையகப்படுத்தி, ஏராளமான பேராசிரியர்கள், ஊழியர்களை பல அரசு துறைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு இடமாற்றம் செய்தது.பணி நிரவல் அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பல்கலை., பொறியியல் மற்றும் நுாலக அறிவியல் புல ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களை மீண்டும் பல்கலைக்கு மாற்ற கோரி, துணைவேந்தர் முருகேசன் அறை முன் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், துணைவேந்தரிடம் அளித்த மனு:தற்போது பிற இடங்களில் நாங்கள் பணி புரிவதால், வருடாந்திர ஊதிய உயர்வு, தொழில் முன்னேற்ற திட்ட அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் போன்ற அடிப்படை உரிமைகளை நிர்வாகம் பெற்றுத் தரவில்லை.
இந்த அடிப்படை உரிமைகளை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து பிற தொழில் நுட்பக் கல்லுாரி மற்றும் பொறியியல் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணி புரியும் பிற துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் பெற்று விட்டனர்.மேலும் 2017 டிசம்பர் மாதம் பணி நிரவல் அடிப்படையில் பணியமர்தப்பட்டு 11 ம் தேதியுடன் மூன்றாண்டு காலம் முடிவதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் வராததால் எங்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கே திரும்ப பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE