குன்னுார்:நீலகிரி மலை ரயில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின்; குன்னுார் - ஊட்டி இடையே டீசல் இன்ஜினால் இயக்கப்படுகிறது.கடந்த வாரம் சனி, ஞாயிறு தினங்களில், 'டி.என்.43' என்ற பெயரில், தனியார் சுற்றுலா நிர்வாகம் சார்பில், மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று வந்த மலை ரயிலில், 'டி.என்.43' என்ற பெயர் இல்லை. என்.எம்.ஆர்., என நீலகிரி மலை ரயிலின் பெயர் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், மலை ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இன்ஜினில், 'பர்ன் குயின்' என்ற பெயரை அகற்றி, 'நீலகிரி பிளை கேச்சர்' என, பெயர் மாற்றப்பட்டு இருந்தது.இந்த ரயில், ஊட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது, எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையத்தில், ஊட்டி சிறப்பு மலை ரயிலை, மறியல் செய்ய முயன்ற, 3 பெண்கள் உட்பட, 79 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று காலை, 7:15 மணிக்கு, பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், ரயில் மறியல் போராட்டம் செய்ய, பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஊர்வலமாக வந்தனர். மறியல் செய்ய முயன்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே, 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
'இது வேறு, அது வேறு'
நீலகிரி மலை ரயிலை, 'பேக்கேஜ்' முறையில் இயக்கி வரும் முஜிபூர் ரஹ்மான் கூறுகையில், ''ஊட்டிக்கு ரயில்வே துறையால் இயக்கப்படும் ரயிலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சுற்றுலா பயணிகளுக்காக, 'பேக்கேஜ்' முறையில் தனியாக, 'ரயில்வே டூரிசம்' முறையில் இயக்கப்படும் ரயில். இது பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்கென நாங்கள், ரயில்வே துறைக்கு தனியாக, 'டெபாசிட்' கட்டுகிறோம்.
குறிப்பிட்ட நாட்கள் மட்டும் இயக்குகிறோம். இதில், வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம். இதனால், வழக்கமான மலை ரயில் பயணத்துக்கு பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE