கோவை:பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் பறிக்கப்பட்ட, இட ஒதுக்கீடு உரிமையை மீட்டெடுப்பது தொடர்பாக, பிற்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில், வரும், 18ல் கோவையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டமைப்பு நிறுவனர் ரத்தினசபாபதி, வக்கீல்கள் திருஞானசம்பந்தம், ராகுல் கூறியதாவது: தமிழகத்தில் கொங்கு வேளாளர் உள்ளிட்ட, 143 சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், வன்னியர் உட்பட, 41 சமூகத்தினர் உள்ளனர்.
கடந்த, 1990 வரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவீதம் என்றிருந்ததை, அரசியல்வாதிகள் கொடுத்த நிர்பந்தத்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற புது ஒதுக்கீடு மூலம், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு, 20 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2009-10ல், பிற்படுத்தப்பட்டோருக்கான, 30 சதவீத இட ஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது, தமிழக அரசு.
மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில், பொதுப்பிரிவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போட்டியிட வேண்டுமென்கிற சூழ்நிலை உள்ளது. உண்மையான ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க, என்ன செய்ய வேண்டுமென ஆலோசித்து முடிவெடுக்க, அரசியல் சாராத, 'பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு' ஏற்படுத்த உள்ளோம். அரசியல், தேர்தல்களில் எவ்விதத்திலும் பங்கேற்காது.
இதுதொடர்பாக ஆலோசிக்க, கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், வரும், 18ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கூட்டமைப்பு கூட்டம் கூடுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE