இன்றைய காலகட்டத்தில், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலியை பற்றி பார்க்கலாம்.
பனராஸ் ஹிந்து பல்கலையில், ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்.-,-ல், எம்.பி.ஏ., பயின்ற பிரமித் பார்கவா என்பவர், ஏறத்தாழ 22 ஆண்டுக்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய எப்.எம்.சி.ஜி., நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் யூனிலீவரில் பணிபுரிந்தார்.அப்போது, வாதக்கோளாறுக்கு உட்கொண்ட மருந்தால், விழித்திரை சேதமடைந்தது. பார்வை குறைபாடு ஏற்பட்டது. இந்த மிக அரிதான நிலை, எவ்வாறு சரியாகும் என்பதற்கான சரியான சிகிச்சையை மருத்துவர்களால் அளிக்க இயலவில்லை.அதன்பின், 10 ஆண்டுகளுக்கு மேலாக 'மோட்டோரோலா' மற்றும் 'குவெஸ்ட் கண்ட்ரோல்' ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். அதேநேரம், அவருடைய பார்வை குறைபாடு தொடர்ந்து மோசமாகி கொண்டு வந்தது.தற்போது, 53 வயதாகும் பிரமித் பார்கவா, ஒரு கட்டத்தில் முழுப் பார்வையையும் இழந்து விட்டார். ஆனாலும், மனந்தளராமல், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் செயலிகளை இயக்கக்கூடிய வகையில் ஒரு செயலி ஒன்றை, இவரது கம்பெனி 'விசியோ ஆப்ஸ்' (Visio Apps) கண்டுபிடித்துள்ளது.இந்த செயலியின் பெயர் 'லுாயி வாய்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. குரல் கட்டளையை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்பில்' ஒரு உரையை அனுப்ப அல்லது 'உபேரில்' ஒரு காரை வாடகைக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.எளிதாக கூறவேண்டுமானால், குரல் கட்டளைகளை பயன்படுத்துவதன் வாயிலாக, பார்வை குறைபாடுள்ள ஒருவர் பல செயலிகளை உபயோகிக்க இயலும். மேலும், அவர்களின் மொபைல் போன்களில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம்.
இது எப்படி சாத்தியமானது? பிரமித் பார்கவாவிற்கு ஒரு நண்பருடன் சந்திப்பு இருந்தது. அவர் டில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்தார். அதற்குப்பின், அவரது நண்பர் அவருக்காக 'உபேர்' வண்டியை முன்பதிவு செய்ய முன்வந்தார்.பிரமித்தின், கார் சவாரிக்கு முன்பதிவு செய்யும் போது, அவரது நண்பர் அவரை அலுவலக முகவரியிலிருந்து, செல்லுமிடம் தேர்வு செய்ய, சவாரி வகை மற்றும் கட்டண விருப்பத்தை தேர்வு செய்ய, சவாரி உறுதிப்படுத்த என்று உதவினார்.வீடு திரும்பும் வழியில், திடீரென்று ஒரு எண்ணம் அவரின் மனதில் தோன்றியது, நண்பரை போலவே எனக்கு உதவக்கூடிய ஒரு செயலியை, நண்பரை, ஏன் நாம் உருவாக்க கூடாது என்று.
அதன் கடின உழைப்பு தான் தற்போது இருக்கும், 'லுாயி வாய்ஸ்' என்ற செயலி.கடந்த, 2018ல் துவக்கப்பட்ட இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனி, படிப்படியாக வெற்றி பெற்று, கடந்த நவ., மாதம் தான் செயலியின் பீட்டா வடிவம் கொண்டு வரப்பட்டது. தற்போது, 70 நாடுகளில், 9 ஆயிரம் பேர் வரை இந்த செயலியை உபயோகிக்கின்றனர். இதனை 'ப்ளே ஸ்டோரில்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவரின் இணையதளம்: visio-apps.comசந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,www.startupandbusinessnews.com, 98204 51259 - சேதுராமன் சாத்தப்பன் -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE