குழந்தைகளின் அடம் பிடித்தலுக்கும், அழுகைக்கும் ஆறுதல் தரும் ஒரே விஷயம், மிட்டாய் என்ற வார்த்தை தான். 'சமத்து பிள்ளையா இருந்தா மிட்டாய் வாங்கித்தருவேன்' என்ற வார்த்தையில், பிஞ்சு குழந்தைகளின் அடம், பஞ்சாய் பறந்து போகும்.அதுவும், 1980, 90களில், கடைகளில் விற்கப்பட்ட மிட்டாய்க்கு, தனி மவுசு தான். கடலை மிட்டாய், கம்மர் கட், தேன் மிட்டாய் என, இன்னும் பல, பல...காலம் மாறினாலும், கறுப்பு வெள்ளை காலத்து நிஜங்களுக்கு, இன்னும் மவுசு குறைந்தபாடில்லை. 'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்களே, அதுபோலத்தான். 80,90களின் மிட்டாய் வகையறாக்களுக்கும் தனி கிராக்கி உண்டு.அந்த காலத்து மிட்டாய் வகையறாக்களை, இந்த காலத்து குழந்தைகளும் ரசித்து உண்ண வேண்டும் என்ற நோக்கில், '80-90 கிட்ஸ் மிட்டாய்'களை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறார், திருப்பூர், அவிநாசி ரோடு பெரியார் காலனியை சேர்ந்த ரவி.இந்த யோசனை எப்படி வந்தது?விவசாயம் தான் செய்து கொண்டிருந்தேன். போதிய வருமானம் இல்லை. அப்போது, என் மனைவி, சமூக வலைதளத்தில் உலா வரும் போது, பழைய விஷயங்களை மக்கள் ரொம்ப விரும்புறாங்க என்றார். கடந்த, 80- 90ம் ஆண்டுகளில், பயன்பாட்டில் இருந்த மிட்டாய் விற்பனை செய்யலாம்ன்னு ஐடியா வந்துச்சு. கடன் வாங்கி தள்ளுவண்டியில் கடை வைச்சேன். முதல் ஒரு வாரம் வியாபாரம் டல் தான். அப்புறம், மக்கள், மிட்டாய் வாங்க ஆரம்பிச்சாங்க. பலரும் தங்களோட பள்ளி நினைவுகளில் லயிச்சு போயிருக்காங்க.ஹார்லிக்ஸ் மிட்டாய், கம்மர் கட்டு, கடலை மிட்டாய், ஜவ்வு மிட்டாய், எடை மிட்டாய், காசு மிட்டாய், பேப்பர் மிட்டாய்ன்னு, 64 வகையான மிட்டாய் விற்பனை செய்து வருகிறேன். இவற்றை, '2கே கிட்ஸ்' குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர். நாட்டு சர்க்கரை பயன்படுத்தி மிட்டாய் தயாரிக்கப்படுவதால், உடல் உபாதை ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE